கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் பலி...!!


புத்தளத்தில் குடும்பத் தகராறு காரணமாக கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் நூர் நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் 2 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்தச் சம்பவம் நேற்றிரவு (29) இடம்பெற்றுள்ளது.

குடும்ப உறவினர்களுக்கிடையில் தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் சில நாட்களாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிவிட அது இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதன்போது, அங்கிருந்த நபர் ஒருவர், மற்றையவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் காயமடைந்த நபரை உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டு அமைய, புத்தளம் பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கள விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 34 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.