சௌபாக்கிய உற்பத்தி கிராமங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு கிராமத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் அங்கு அமைக்கப்படவுள்ள விற்பனை நிலையங்களுக்கான இட ஆய்வுகளை முன்னெடுத்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பட்டிருப்பு சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள கட்டிடங்களை புனரமைப்பு செய்து அதில் கைத்தறி உற்பத்திகள் மற்றும் விற்பனை நிலையங்கள் அமைப்பு குறித்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த கள விஜயத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,சிறுகைத்தொழில் மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதியின் சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உற்பத்தி கிராமங்கள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.