பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் கடினபந்;து விளையாட தடை –சமூக ஆர்வலர்கள் கவலை


மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் உள்ள பொது விளையாட்டு மைதானத்தில் கடினபந்து கிரிக்கட் விளையாடுவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை தடைவிதித்துள்ளமைக்கு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெரிய கல்லாறு பொது மைதானத்தினுள் கடினபந்து விளையாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தமாறு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் எழுத்துமூலமான அறிவிப்பினை விடுத்துள்ளார்.

பெரியகல்லாறு பொது மக்கள் மற்றும் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை ஆகியோரால்  செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தரின் அறிக்கைக்கு அமைவாகவும், 23.09.2021ஆம் திகதி நடைபெற்ற எமது சபைக்கூட்டத்தில் இது விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் குறித்த பிரச்சனைக்கு பின்வரும் தீர்வு வழங்கப்படுகின்றது என்பதனை அறியத்தருகிறேன்.

மைதானத்தின் அளவு குறைவாக காணப்படுவதனால் மைதானத்தின் மத்தியில் கடினபந்து விளையாடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தும்படி தெரிவிப்பதுடன் வலைக் கூட்டுக்குள் பயிற்சியில் ஈடுபடலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தவிசாளர் விளையாட்டுக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறில் உள்ள கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம்,கல்லாறு விளையாட்டுக்கழகம்,ஸ்ரார் விளையாட்டுக்கழகம்,ஒலிம்பியா விளையாட்டு;ககழகம் உட்பட எட்டு கழகங்களுக்கு இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு பொதுவிளையாட்டு மைதானம் மட்டுமே பெரியகல்லாறில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமது விளையாட்டு திறமையினை வெளிப்படுத்துவதற்கான களமாகவுள்ளது.

இந்த நிலையில் இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டினை கருத்தில்கொள்ளாது வெறுமனே சிலரின் குரோதமான செயற்பாடுகள் காரணமாகவே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெரியகல்லாறில் உள்ள விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

1996ஆம்ஆண்டு தொடக்கம் குறித்த பகுதியில் கடின பந்து கிரிக்கட் விளையாடப்பட்டுவரும நிலையில் இன்று சிலர் அதனை தடுத்து பொதுவிளையாட்டு மைதான காணியை அபகரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சியாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இளைஞர்களின் திறனை விருத்திசெய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தாது அவர்களின் திறனை மழுங்கடிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்காமல் குறித்த தடைகளை நீக்க இளைஞர்களின் விளையாட்டு மேம்பாட்டுக்கு வழியேற்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது குறித்த விளையாட்டு மைதானம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விளையாட்டு உத்தியோகத்தரின் பரிந்துரைக்கு அமைவாக சபையின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலத்தில் இது தொடர்பில் அனைவருடனும் பேசி தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.