நாட்டின் கொரோனா பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் வாராந்த பணிக்குழு கூட்டம் (30) ராஜயகிரியவிலுள்ள செயற்பாட்டு மையத்தின் அலுவலகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கொவிட் - 19 பரவல் தடுப்புச் செயற்பாடுகள் நவடிக்கைகள் தொடர்பிலான முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் தற்போது இடம்பெற்று வரும் தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம், வைரஸ் திரிபு நிலவரங்கள், எதிர்காலச் செயற்பாடுகளுக்கான கண்காணிப்புச் செயற்பாடுகள் என்பன தொடர்பில் அறிவுறுத்தப்பட்டது.
42 நாட்களுக்குப் பின்னர் நேற்று (01) நீக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் விளைவாக உயிரிழப்புக்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பெருமளவில் சரிவை காணமுடிவதாகவும் தளபதி சுட்டிக்காட்டினார்.
அத்தோடு ஜனாதிபதியின் அறிவுரையின் பேரில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார ஒழுங்கு விதிகளும் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல் , தற்போதைய தடுப்பூசி செயற்றிட்டம், சமூக பரவல் மற்றும் தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், வீடுகளில் வைத்து சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாகமே மேற்படி இலக்கை அடைந்துகொள்ள முடிந்துள்ளதென தெரிவித்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டமையினால் எந்தவொரு பொதுக்கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என்றும் இக்காலகட்டதில் பொது மக்களின் நடத்தைகள் தான் மிக முக்கியமானதாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு தேசிய தடுப்பூசி திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தும் பட்சத்தில் நாட்டில் 11.73 மில்லியன்களுக்கும் அதிகமான மக்களுக்கு ஐந்து வகையான தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் அவை 31.9 மில்லியன் அளவான மாத்திரைகள் என்றும் தெரிவித்தார்.
அதேநேரம் எதிர்வரும் நாட்களில் 67.3 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கமுடியுமென எதிர்பார்த்திருப்பதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துச் செயற்பாடுகள் இடம்பெற்றாலும் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படாதென தெரிவித்தார். அத்தோடு 1904 மற்றும் 247 அவசர அழைப்பு இலக்கங்களுடாக அழைத்து வைத்திய வசதிகளை வீட்டிற்கே பெற்றுக்கொள்ளும் திட்டம் பெருமளவில் பயனளித்துள்ளதென தெரிவித்த அவர், மேற்படி செயற்பாடுகளுக்கு உறுதுணையாக செயற்பாட்ட சகலருக்கும் நன்றிகளையும் கூறிக்கொண்டார்.
ஓட்டமாவடி மற்றும் கிண்ணியா பகுதிகளில் நடைபெறும் பூதவுடல்களை அடக்கம் செய்யும் செயற்பாடுகள், வெளிநாட்டுகளிலிருந்து வருவோருக்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் மற்றும் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் ஆகியோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்தோடு இந்நிகழ்வில் கொவிட் – 19 பரவல் தடுப்பு செயலணியின் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை தவிர்ந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் சூம் தொழில்நுட்பம் மூலம் மேற்படி அமர்வில் கலந்துகொண்டனர்.