யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியான குடும்பஸ்தர் –செங்கலடியில் பரிதாபம்


(அருண்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி கருத்தப்பாலத்திற்கு அருகே காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

செங்கலடி கொடுவாமடு காளிகேயில் வீதியைச் சேர்ந்த 63 வயதான குஞ்சித்தம்பி காலிக்குட்டி என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை செங்கலடி கருத்தப்பாலத்திற்கருகே மாடு மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு காவலுக்கு செல்லும் போதே காட்டு யானை தாக்கியுள்ளது.

இதே வேளை சம்பவ இடத்தில் கூடிய பொது மக்கள் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தில் இடம்பெறும் காட்டு யானை அட்டக்காசத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நீண்டகாலமாக தாங்கள் இந்த பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றபோதிலும் இராஜாங்க அமைச்சரோ , பாராளுமன்ற உறுப்பினர்களோ இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லையெனவும் நாட்டின் ஜனாதிபதிக்கு இங்கு என்ன நடக்கின்றது என்பது தெரியாதநிலையே உள்ளதாகவும் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்களையே தெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இதே வேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த திடீர் மணர விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் விசாணையையும் முன்னெடுத்தார். சடலம் தற்போது பிரேதப்பரிசேதனைக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதே வேளை மாலை 06.00 மணியளவில் சம்பவ இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில் குடும்பஸ்தரை தாக்கிவிட்டு நின்ற யானையை வனவிலங்கு அதிகாரிகள் விரட்டினர்.