மட்டக்களப்பில் இடம்பெற்ற உலக நீச்சல் தின நிகழ்வு...!!


உலக நீச்சல் தினத்தினை முன்னிட்டு கொரோனா அச்சுறுத்தலால் வீழ்ந்துள்ள சுற்றுலாத்துறையினை எழுச்சிபெறச்செய்யும் வகையில் உலக நீச்சல் தின நிகழ்வு மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. 

இதனை முன்னிட்டு விசேட நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.

சுற்றுலாப்பயணிகளை கவரும் கொரோனாவினால் உளவளத்தினை மேம்படுத்தும் வகையிலும் மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியினால் ஆறு மாணவர்கள் கலந்துகொள்ளும் கடலில் ஒரு கிலோமீற்றர் நீளம் நீந்தும் நிகழ்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் பொறுப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக நீச்சல் பயிற்சியாளருமான தங்கத்துரை சோமஸ்காந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன்,விளையாட்டு உத்தியோகத்தர்களான பிரசாத், சிவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வடகிழக்கு மாகாணத்தில் மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியினை கல்லூரி அமைத்து வழங்கிவரும் ஒரேயொரு நீச்சல் பயிற்சி கல்லூரியாக இருந்து வருவகின்றது.

சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்து கல்லடி கடற்கரையில் ஆறு மாணவர்கள் ஒரு கிலோமீற்றர் நீந்திவந்து பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.

இந்த நீச்சல் நிகழ்வில் ஐ.கெல்வின் கிஷோர், கு.டான்ஸ்டித், என்.லிருக்க்ஷன், அரிமாத்துங்கன், கு.டான்ஸ்டின் மற்றும் கு.டான் பிரீடோ ஆகிய நீச்சல் வீரர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையின் பெரும்பாலான பகுதிகள் நீரினால் சூழப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொருவரும் நீச்சல் தொடர்பான அறிவினைப்பெற்றிருக்கவேண்டும் என்பதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு நீச்சல் கல்லூரியின் பொறுப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக நீச்சல் பயிற்சியாளருமான தங்கத்துரை சோமஸ்காந்தன் தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர் யுவதிகளிடையே விடுபட்டுபோயிருக்கும் உடல் ஆரோக்கியத்தினை பேணும் செயற்பாடுகளுக்கு மத்தியில் இவ்வாறான நிகழ்வுகள் அவர்களுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன் தெரிவித்தார்.