கொக்கட்டிச்சோலையில் நடைபெற்ற பெரும்போக பயிர்ச்செய்கைக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய நீர்ப்பாசனம் மற்றும் மானாவாரி கண்டங்களுக்கான 2021 / 2022ஆம் ஆண்டுக்கான பெரும் போக விவசாய செய்கை மேற்கொள்ளும் கால எல்லையை தீர்மானிக்கும் மக்களுடானான கந்துரையாடலின் ஆரம்ப கூட்டம் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேசத்தின் கொக்காட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நேற்று (2021.09.28) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், பட்டிப்பளை பிரதேச செயலாளர், பட்டிப்பளை பிரதேச சபை தவிசளர், கமநல அபிவிருத்தி உத்தியோகாஸ்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகாஸ்தர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் பெரும்போக விவசாய நடவடிக்கைக்கு தேவையான சேதன பசளையை தயாரித்தல், அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், உழவு முறைகள் தொடர்பான விழிப்பூட்டல், உழவு மற்றும் விதைப்பு கால எல்லைகளை தீர்மானித்தல், போன்ற விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

இத்துடன் சட்டவிரோதமாக ஆறுகளில் மணல் மண் ஏற்றப்படுவதாகவும் அதனை நிறுத்துமாறும் அவ்வாறு ஆறுகளை ஆழமாக்கவோ, குளங்களை ஆழப்படுத்தவோ தோண்டி எடுக்கப்படும் மணல் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படாமல் குறித்த பகுதியில் அபிவிருத்தி பணிக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கிராம மக்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

குறித்த மக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சட்டவிரோத மணல் மண் ஏற்றப்படும் பிரதேசங்களில் பொதுமக்களை விழிப்பூட்டும் கூட்டங்களை நடாத்தி மக்களின் ஒத்துழைப்பினை பெற்று குறித்த சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மக்கள்  முன்வரவேண்டும் எனவும், மணல் ஏற்றுவோருக்கான அனுமதி பத்திரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இரசாயன உர பாவணை தடை செய்யப்பட்டிருப்பதால் அதற்கு பதிலாக சேதன உர பாவைக்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாக இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த பெரும்போக செய்கையில் கொக்காட்டிச்சோலை பிரதேசத்தில் 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.