மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரணப் பணிகளின் தொடர்ச்சியாக கடந்த 25 மற்றும் 26 ஆம் திகதிகளில், மன்னார் மாவட்டத்தில் குறித்த நிவாரண பணிகள் முதல் தடவையாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்படி, ஏறக்குறைய 7.5 லட்சம் ரூபாய் செலவில் 500 குடும்பங்களை சார்ந்த 2500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO) கனடா அமைப்பின் நிதி அனுசரணையில் குறித்த நிவாரண பணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இராமகிருஷ்ண மிஷன் கல்லடி ஆச்சிரம உதவி மேலாளர் சுவாமி நீலமாதவானந்த ஜீ குறித்த நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து வழங்கிவைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக முன்னெடுக்கப்பட்ட குறித்த நிவாரண பணியில் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட செம்மண் தீவு, தேத்தாவடி, கணேசபுரம், தீவு பிட்டி, தாராபுரம், சபரிகுளம், வெள்ளாங்குளம் ஆகிய 9 மிகவும் பின்தங்கிய பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 400 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சோயா, சீனி, தேயிலைத்தூள், சமபோசா போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1500 ரூபாய் வீதம் பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தர் தலைமையில் மன்னார் மாவட்ட ராமகிருஷ்ண மிஷன் பக்தர்களோடு இணைந்து, மன்னார் நலிவுற்றோர் நலன் காப்பு நிதிய தொண்டர்கள் மற்றும் திருமதி நல்லம்மாள் நினைவு- நேயம் அறக்கட்டளை தொண்டர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.
குறித்த நிவாரண பணியின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பகுதியை சேர்ந்த கொரோனா தொற்று அச்சநிலை காரணமாக நிலவும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்த 100 குடும்பங்களுக்கும் குறித்த நிவாரணப் பொருட்களானது வழங்கி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.