நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டம்


ஜனாதிபதியின் 100நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதியின் 100நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் சகல வசதிகளும் கொண்ட நடைபாதையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை நகர அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துவருகின்றது.

100நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைவாக இந்த நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

இந்த செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் வகையில் இந்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகரசபையில் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு மாநகரசபையின் பொறியியலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் சுமார் 300மீற்றர் தூரம் இந்த நடைபாதை பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுமார் 18மில்லியன் ரூபா செலவில் அமைப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான அனைத்துவிதமான உதவிகளையும் மாநகரசபை வழங்கும் எனவும் இதன்போது மாநகரசபை முதல்வர் தெரிவித்தார்.