வாகரை ஆதிவாசி மக்களுக்கு நிவாரணம் வழங்கிவைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குஞ்சன்கற்குளத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஆதிவாசிகள் அதிகளவில் வசிக்கும் குஞ்சன்கற்குளம் பகுதி மக்கள் கொவிட் தாக்கம் காரணமாக அன்றாட தொழில்வாய்ப்பினை இழந்துள்ள நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பினால் அவர்களுக்கான ஒது தொகுதி நிவாரணப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் சுதர்சனின் சகோதரி ஞானேஸ்வரின் மகனின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட உதவியினால் இந்த நிவாரண உதவிகள் அப்பகுதியை சேர்ந்த 77 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.

சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவியும் சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிச்செயலாளருமான திருமதி செல்வி மனோகர்,வாகரை பிரதேசசபை உறுப்பினர் ரோஹினி,ஆதிவாசிகளின் தலைவர் வேலாயுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கொவிட் தாக்கம் காரணமாக அன்றாடம் தொழில்செய்து தமது வாழ்வாதாரத்தினை நடாத்திக்கொண்டிருக்கும் ஆதிவாசி மக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொழில்வாய்ப்புகளை இழந்து நிற்பதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சுவிஸ் உதயம் அமைப்பின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்ந்து இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.