மட்டக்களப்பில் தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனாபாம் தடுப்பூசிகள் ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இன்று காலை தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரனா அச்சுறுத்தல் அதிகமாகவுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு கூழாவடி,விக்னேஸ்வரா கலாசார மண்டபத்தில் இன்று காலை முதல் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று காலை முதல் பெருமளவானோர் தடுப்பூசிகளைப்பெற்றுக்கொண்டதை காணமுடிந்தது.

12வாரங்களை பூர்த்திசெய்த கர்ப்பம்தரித்த பெண்கள் அனைவரும் குழந்தையினை பிரசவிக்கும் வரையில் தங்களுக்குரிய தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக சமூக சுகாதார பிரிவுக்கான பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி தர்சினி காந்தரூபன் தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றப்பட்ட காலம் தொடக்கம் எந்த கர்ப்பிணிப்பெண்ணுக்கும் பக்கவிளைவுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லையெனம் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.