கொரான தொற்று அதிகரிப்பு –மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானங்கள்


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துச்செல்லும் நிலையில் அதனைக்கட்டுப்படுத்துவது குறித்தான விசேட கலந்துரையாடல் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன்,மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா,உதவி பிரதேச செயலாளர்கள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,கிராம சேவையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளிலும் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவது தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி நடமாடும் விற்பனையில் ஈடுபவர்களை கைதுசெய்யவும் அனுமதிப்பத்திரம் பெற்று அதனை முறையாக பயன்படுத்தாதவர்களின் அனுமதிகளை ரத்துச்செய்யவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் பயணத்தடை காலத்தில் தேவையற்ற வகையில் நடமாடுவோரை கைதுசெய்து அன்டிஜன் பரிசோதனைக்களுக்குட்படுத்தவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்வரும் 21ஆம் திகதி பயணத்தடை நீக்கப்பட்டாலும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இறுக்கமான கட்டுப்பாடுகளை பேணவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தெரிவித்தார்.