கொவிட் வைத்தியசாலைகளுக்கு மட்டக்களப்பில் தொடர்ச்சியாக உதவிகள் வழங்கிவைப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் சுகாதார துறையினரின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

கொவிட் செயலணியின் வேண்டுகோளுக்கு அமைவாக கொரோனா சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் ஏனைய கொவிட் சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியசாலைகளுக்கு பொதுமக்களால் இதுவரை சுமார் 2 கோடிக்கும் அதிக பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் இன்றைய தினமும் பொது அமைப்புகளினால் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு முனைப்பு ஸ்ரீலங்கா அமைப்பினால் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்காக ஒரு மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் ,மட்டக்களப்பு சர்மத அமைப்பினரால் 6.5 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்களும், எஸ்கோ அமைப்பின் ஊழியர்களின் பங்களிப்பில் 3 இலட்சத்தி 51 ஆயிரம் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன், கொவிட் செயலணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் கொஸ்வத உட்பட பலர் கலந்துகொண்டனர்.