இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் ஒன்றினை தயாரிக்கும் பணிகளை கல்வி அமைச்சர் ஜிஎல் .பீரிஸ் முன்னெடுத்துவருவதாகவும் எதிர்வரும் தினங்களில் அமைச்சரவையில் சமர்பிக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி அலுவலகத்தின் ஆலோசனைக்கமைவாக கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுணர் அநுராதா ஜகம்பத், இராஜாங்க அமைச்சர்களான எஸ்.வியாழேந்திரன், ரொசான் லால் சிங்க, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு முன்பள்ளி மற்றும் இராஜாங்க அமைச்சர் நிஸாந்த டீ சில்வா, மற்றும் மேலும் பல இராஜாங்க அமைச்சர்கள்,மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமாகிய நசீர் அஹமட், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து திணைக்களங்களின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பின்னர் மாவட்ட அரசாங்க அதிபரினால் தங்களை நிகழ்வுக்கு வரவேண்டாம் என்று கூறப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தங்களை நிகழ்வுக்கு அழைக்கவேண்டாம் என்று கூறியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.
மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பான நிகழ்வுகளுக்கு தங்களை அழைப்பதில் என்ன தவறு உள்ளது எனவும் சந்திரகாந்தன் தன்னைக்கண்டு அச்சப்படுவதாகவும் சாணக்கியன் இதன்போது தெரிவித்தார்.
மாவட்டத்தில் காணப்படும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகளை தெரிவிக்கும் உரிமை மக்கள் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தங்களுக்கும் உள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டாம் எனவும் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது எனவும் கூட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அமைச்சர் நாமல்ராஜபக்ஸ இதன்போது தெரிவித்தார்.
கல்வி, விளையாட்டு, சுகாதாரம் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய தேவைகளாகவுள்ள கிராமிய பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், பல திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகளுக்கான தீர்வுகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
எதிர்வரும் மேமாதம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி இலங்கையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களை ஒருங்கிணைத்ததாக மாபெரும் தொழிற்சந்தையொன்றை நடாத்தவுள்ளதாக இங்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்து இங்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவற்றினை நிவர்த்திப்பதற்கான உத்தரவுகளும் அமைச்சின் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மட்டக்களப்பில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகம்,தொழில்நுட்ப கல்லூரிகள்,உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் குறைபாடுகளை நிவர்த்திசெய்து இளைஞர் யுவதிகள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் தகைமைகளைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டன.