மண்முனைப்பற்று பிரதேசசபை –ரி.எம்.வி.பி.ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது ஐக்கிய தேசிய கட்சி


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசசபையின் ஆளும் அதிகாரத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் தெரிவிற்கான அமர்வு இன்று காலை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேசசபையில் தொடர்ச்சியாக தவிசாளருக்கு எதிரான பிரேரணைகள் வெற்றிபெற்றதை தொடர்ந்து தவிசாளர் உள்ளுராட்சிமன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக அதிகாரம் இழந்த காரணத்தினால் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

17 உறுப்பினர்களைக்கொண்ட மண்முனைப்பற்று பிரதேசசபையில் இன்றைய தினம் 16 உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர்.

இந்த அடிப்படையில் தவிசாளர் தெரிவு தொடர்பான அறிவிப்பினை கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மணிவண்ணன் விடுத்தபோது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உறுப்பினராகவுள்ள தயானந்தனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் முன்மொழியப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நகுலேஸின் பெயர் முன்மொழியப்பட்டது.

இரு போட்டியாளர்கள் காணப்பட்டதன் காரணமாக வாக்கெடுப்பின் அடிப்படையில் தவிசாளர் தெரிவுக்கு சென்ற நிலையில் தயானந்தனுக்கு ஆதரவாக 10 வாக்குகளும் நகுலேஸ{க்கு ஆதரவாக 05வாக்குகளும் பெற்றுக்கொள்ளப்பட்டது.முன்னாள் தவிசாளரான மகேந்திரலிங்கம் யாருக்கும் வாக்களிக்கவில்லையென சபையில் அறிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் போட்டிக்கு சென்றவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்திருந்தனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,நல்லாட்சிக்கான தேசிய இயக்கம்,தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட அனைத்து கட்சிகளும் தயானந்தனுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இதனடிப்படையில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் புதிய தவிசாளராக தயானந்தன் தெரிவுசெய்யப்பட்டார்.

இதன்போது சபைக்கு வருகைதந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தவிசாளருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவு வழங்கியவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.