மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதையற்ற நாட்டினை உருவாக்கும் செயறிட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
இதன் கீழ் மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு -திருகோணமலை வீதியில் வைத்து இரண்டு முச்சக்கர வண்டிகளை சோதனையிட்டபோது அதில் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் இருந்து 11கிராம் மற்றும் 20 கிராம் கொண்ட பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
செங்கலடி,ஏறாவூர் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


