மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் 22 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இதில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கர்ப்பிணி தாதியும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டு அன்டிஜன் சோதனையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இன்று மேலும் 57பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அதில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோன்று மட்டக்களப்பு நகரில் நேற்று இனங்காணப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அதில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கர்ப்பிணி தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இன்று இரத்த பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் இருதயபுரம்,விஜயபுரத்தினை சேர்ந்தவர் எனவும் அவருடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்டுவருவதாகவும் பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இதேநேரம் இன்றைய தினம் காத்தான்குடி பகுதியில் 06 தொற்றாளர்களும் கோறளைப்பற்று மத்தியில் 04தொற்றாளர்களும் ஆரையம்பதியில் 01 தொற்றாளரும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமையினை கருத்தில்கொண்டு பொதுமக்கள் வெளியில் வருவதை கட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 250தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
