இந்த அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களை ஒரு கண்ணாலும் பெரும்பான்மையின மக்களை இன்னொரு கண்ணாலும் பார்க்கின்ற நிலைமை மீண்டும் வந்திருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இரா.சாணக்கியன் மற்றும் ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரம்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம்,
மட்டக்களப்பு மாவட்டத்திலே மேய்ச்சற்தரைப் பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. பல மேய்ச்சற் தரைகள் இங்கு இருந்தாலும் இன்று பேசுபொருளாக இருப்பது மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சற்தரைப் பிரச்சினையாகும். இரண்டு மூன்று தலைமுறைகளாக தங்களது கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருக்கும் இந்த மேய்ச்சற்தரையானது இன்று இந்த அரசாங்கத்தினதும் ஆளுநரினதும் பின்புலத்துடன் அம்பாறை,பொலன்னறுவை மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையின மக்கள் இங்கு வந்து சேனைப் பயிர்ச்செய்கை மட்டுமல்லாமல் வேளாண்மைகூட செய்துகொண்டிருக்கும் நிலைமையை நேரடியாக இங்கு வந்து பார்த்திருக்கின்றோம். இந்த பண்ணையாளர்களை சந்தித்து பேசியிருக்கின்றோம். உண்மையில் அவர்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் நாங்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலிருந்து அரசஅதிபர்,ஆளுநர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்தது மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்தில்கூட ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையை கொண்டு வந்து இதை வெளியுலகிற்கு கொண்டுவந்தோம்.
சம்பந்தப்பட்ட மகாவலிக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இறுதியாக அந்த ஒத்திவைப்புப் பிரேரணைக்கு பதில்கூட கூறியிருந்தார். மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் அந்த இடங்களை காலி செய்வதாகவும் அதற்குப் பிறகு சட்டரீதியாக அந்த மேய்ச்சற்தரைப் பிரச்சினையை அணுகுவோம் என்று கூறியிருந்தார்.
சட்ட ரீதியாக என்பதில் அவர் எதனை மனதில் வைத்துக் கூறினாரோ தெரியாது. சிலவேளை அந்த மக்களுக்கு சட்டரீதியாக அந்தக் காணிகளை பிரித்துக் கொடுக்கும் நோக்கம் இருக்கின்றதோ தெரியாது. இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பிரச்சினையை பெரிதாக்கியிருக்கின்றது. அவர்களுக்கு ஒரு தீர்வை பெற்றுக்
கொடுப்பதற்காக குரல் கொடுத்திருக்கின்றோம். இறுதியாக நீதிமன்றத்தை நாடி அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம்.
இந்த அரசு ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டு தமிழ் மக்களை ஒரு கண்ணாலும் பெரும்பான்மையின மக்களை இன்னொரு கண்ணாலும் பார்க்கின்ற நிலைமை மீண்டும் வந்திருக்கின்றது. இந்த நிலைமை தொடருமாக இருந்தால் ஏற்கனவே அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள். அந்த நிலைமை மீண்டும் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு எங்கள் மத்தியில் இருக்கின்றது. அந்த நிலைமை உருவாகாமல் அரசானது இந்தப் பிரச்சினைக்கான முடிவை எடுக்க வேண்டும். அதேபோல நீதிமன்றமும் நீதியை நிலைநாட்டுமென நான் நினைக்கின்றேன்.
கிழக்கு மாகாண ஆளுநருடைய தலையீடு மாத்திரமல்ல அவர்தான் இதனை முன்னின்று நடத்துகின்றார் என்றுதான் நான் கூறுவேன். ஏனென்றால் மகாவலிக்குப் பொறுப்பான சமல் ராஜபக்ச அவர்களை நாங்கள் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி வெலிக்கந்தையில் மகாவலி அலுவலகத்தில் சந்தித்தபோது அம்பாறை,பொலன்னறுவை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த இடத்திற்கு நேரடியாக கள விஜயம் செய்து இதற்கான முடிவினை காணுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார்.
அந்த கூட்டத்தினை நடாத்துவதற்கு முன்பாக கிழக்கு மாகாண ஆளுனர் அங்கு நேரடியாக விஜயம் செய்தது மாத்திரமன்றி அடுத்தநாள் ஊடகங்களில் 500ஏக்கர் காணியினை சேனைப் பயிர்ச் செய்கைக்காக கொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இதையெல்லாம் பார்க்கின்றபோது அமைச்சரையும் மீறி ஆளுநர் அவர்கள் சேனைப் பயிர்ச்செய்கைக்காக இங்கு வந்து மேய்ச்சற் தரையை ஆக்கிரமித்திருக்கின்ற இந்த மக்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்றார் என்பது வெளிப்படைத்தன்மையாகும்.