படுவான்கரையின் வளங்கள் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளையிடப்படுகின்றது


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் உள்ள மண்வளம் உட்பட பல வளங்கள் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளையிடப்பட்டுவருவதாக மறத்தமிழர் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அதிகார வலிமை கொண்ட அதிகாரிகள் இந்த அனைத்து சட்ட விரோதச் செயல்களை தொடர்ந்தும் கண்டும் காணாமலும் இருப்பது மிகப்பெரும் சந்தேகங்களையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்துவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான ஊடக சந்திப்பு மட்டு.ஊடக அமையகத்தில் நடைபெற்றது.இந்த ஊடகசந்திப்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலப்பு அன்பழகன் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பில் குறிப்பாக படுவான்கரைப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக  இடம் பெறுகின்ற சட்ட விரோத மண்கடத்தல்கள்,வடிசாராய விற்பனைகள்,மாடுகள் திருடு போதல்,மரங்கள் வெட்டி ஏற்றப்படுதல் போன்ற இயற்கை அழிப்பு செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.  

அதிகார வலிமை கொண்ட அதிகாரிகள் இந்த அனைத்து சட்ட விரோதச் செயல்களை தொடர்ந்தும் கண்டும் காணாமலும் இருப்பது மிகப்பெரும் சந்தேகங்களையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக இந்த சட்ட விரோதச் செயல்களை செய்யும் நபர்கள் வாகனங்களை அதிவேகமாக செலுத்துவதினால் தொடர்ந்தும் உயிர்களை காவு கொள்ளும் அளவிற்கு விபத்துக்கள் இடம் பெற்று வருகிறது. வெளிப்படையாக இடம்பெறுகின்ற இந்த சட்டவிரோதச் செயல்களுக்கு சில அரச அதிகாரிகளும் துணை போகின்றார்களோ என்று சந்தேகிக்கின்றோம். 

ஒரு நட்டின் கனிம வளங்கள் என்பது அடுத்த தலைமுறையின் இருப்பை எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு பாதுகாக்க வேண்டிய அதி முக்கிய பணியாகும் இருப்பினும் இயற்கையின் கொடையாக வாரி வழங்கப்பட்ட இந்த இயற்கை வளங்களை சட்டத்திற்கு முறணான வகையில் சூறையாடுகின்ற முதலாளிகளை இனம் கண்டு சட்டத்திற்கு முன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

அத்தோடு இந்த வளச்சுரண்டல் சட்ட விரோதச் செயல்களை செய்கின்றவர்களுக்கு பின்னே அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் இருக்கும் என்ற சந்தேகமும் எமக்கு உண்டு.

இனிவரும் காலங்களில் எமது மண்ணின் வளங்கள் திருடு போவதை உடனே தடுத்து நிறுத்தி மண்ணின் வளத்தை பாதுகாத்திட அரசாங்கம் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.  இதற்கு துணைபோகின்ற அரச அதிகாரிகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்றும் இந்த விடயத்தில் கிராம ரீதியிலான பொது அமைப்புக்கள் வளச்சுரண்டல்களை சட்ட ரீதியிலாக  தடுத்து நிறுத்தி  சமூக அக்கறையோடு தடுத்திட முன்வர வேண்டும் எனவும்  இத்தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம்.