மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதியில் பல வருடங்களாக மக்கள் எதிர்கொண்டுவந்த குடிநீர்ப்பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவலடி பகுதி கடந்த சுனாமி அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த கிராமமாகும்.இப்பகுதியில் ஒரு பகுதி கடலாகவும் ஒரு பகுதி மட்டக்களப்பு வாவியினையும் கொண்ட பகுதியாகவும் காணப்படுகின்றது.
இப்பகுதியில் உள்ள மக்கள் நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கிவரும் நிலையில் இது தொடர்பிலான கோரிக்கைகளையும் முன்வைத்துவந்தனர்.
இப்பகுதியில் உள்ள கிணறுகள் உவர் நீர்தன்மை காணப்படுவதனால் குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காக நீண்ட தூரம் பயணிக்கவேண்டிய நிலையிருந்துவந்தது.
இந்த நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊடாக 41கோடி ரூபா செலவில் மட்டக்களப்பு மாநகரசபையின் வள பங்களிப்புடன் குடிநீர் விநியோகத்திற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் வேலைத்திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் பூர்த்தியடைந்த நிலையில் அதன் மூலம் மக்களுக்கான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டங்கள் இன்று வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள்:, நாவலடி கிராமத்தின் முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது குடிநீர் விநியோகத்திட்டம் திறந்துவைக்கப்பட்டதுடன் மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.