மட்டக்களப்பில் நவீன முறையில் கசிப்பு உற்பத்திசெய்த இடம் மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகை

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் நவீன இயந்திரங்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமங்களை அண்டியுள்ள காடுகளிலும் ஆற்றங்கரைகளை அண்டிய பகுதியிலுமே கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டிருந்தன.

இந்த நிலையின் நேற்று மாலை மட்டக்களப்பு பார் வீதியில் அமிர்தகழிபகுதியொன்றில் உள்ள வீட்டில் கசிப்பு உற்பத்திசெய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது நவீன முறையில் கசிப்பு உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் மதுவரித்திணைக்கள பரிசோதகர் ஏ.ஆனந்தநாயகம்,மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.ஜனானந்தன்,எம்.சேவியர்,கே.ரஜனிகாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டனர்.

இதன்போது நான்கு போத்தல்களில் இருந்த 2500 மில்லி லீற்றர் கசிப்பும்,கசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருள் கலவைகள் 10ஆயிரம் மில்லி லீற்றர் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மதுவரித்திணைக்களத்தின் பிரதான பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.