முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் நிவாரணப்பணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரணா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றாடம் தொழில்செய்து குடும்பத்தினை கொண்டுசெல்லும் குடும்பங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

குறிப்பாக படுவான்கரை பிரதேசத்தில் நகர்ப்பகுதிக்கு வந்து கூலிவேலைகள் செய்வோரும் படுவான்கரை பகுதியில் அன்றாடம் தொழில்செய்து குடும்பத்தினை கொண்டு நடாத்தியவர்களும் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரத்தினை நோக்காக கொண்டு பல்வேறு அமைப்புகள்,ஆலயங்கள் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
ஒரு குடும்பத்திற்கு அத்தியாவசிய தேவையாகவுள்ள சுமார் 1750 ரூபா பெறுமதியான பொருட்கள் கொண்டு 450 பொதிகள் நிவாரணமாக வழங்கிவைக்கப்பட்டன.

முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்களின் தலைவரும் போரதீவுப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான ம.சுசிகரன் தலைமையில் இந்த நிவாரணப்பொருட்கள் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி இணைப்பாளர் இ.கலைச்செல்வனிடம் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முனைத்தீவு மாணிக்கப்பிள்ளையார் மற்றும் பத்திரகாளியம்மன் ஆலயங்களின் செயலாளர் வி.சசிகரன்,திருப்பணி சபை தலைவர் யோ.ஜெயமோகன்,திருப்பணிசபை செயலாளர் பூ.ரதீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களினால் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.