மகிழடித்தீவு வைத்தியசாலை மேற்கொள்ளும் சேவை – ஏனைய வைத்தியசாலைகளுக்கு முன்னுதாரணம்

கொரனா தொற்றினை தடுப்பதற்கு பொலிஸாரின் முன்னெடுக்கப்படும் ஊரடங்கு சட்டம் காரணமாக பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

ஊரடங்கு சட்டம் காரணமாக வைத்தியசாலைகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் பெறச்செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவரும் நிலையில் அவர்களின் நிலையினை கருத்தில்கொண்டு நடமாடும் வாகன வைத்திய சேவை மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு படுவான்கரை பிரதேசத்தில் உள்ள மக்களின் நன்மை கருதி மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை இந்த உயரிய சேவையினை ஆரம்பித்து முன்னெடுத்துவருகின்றது.

படுவான்கரை பகுதியில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு சென்று வாராந்தம் மருத்துபரிசோதனைகள் மற்றும் மருந்துகளைப்பெற்றுவந்தோர் ஊரடங்கு காரணமாக குறித்த வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாத நிலையிருந்தது.

அவர்களின் நன்மை கருதி மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தி.தவநேசனின் ஏற்பாட்டில் அவரது கண்காணிப்பில் இந்த வாகன நடமாடும் சேவைகள் முன்னெடுத்துசெல்லப்படுகின்றது.

பொதுமக்கள் வைத்தியசாலையில் ஒன்றுகூடுவதை தவிர்க்கவும் பொதுமக்களின் சிரமத்தினையும் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தி.தவநேசன் தெரிவித்தார்.