இருதயபுரம் பகுதியில் மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியில் நிவாரணம் வழங்கும் நடைமுறைகள் சரியான முறை மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இன்று காலை இருதயபுரம் மேற்கு 09வது வீதியில் உள்ள கிராம சேவையாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடாத்தியதினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
குறித்த பகுதி கிராம சேவையாளர் முறையான வகையில் நிவாரணங்களை பங்கீடுசெய்வதில்லையெனவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன் அப்பகுதியில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் நிவாரணம் வழங்கும்போது பக்கச்சார்பாக நடந்துகொள்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தமக்கு சமுர்த்தி மூலம் 5000ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டாலும் அவை கடன் அடிப்படையிலேயே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த மக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டதை தொடர்ந்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதன்போது அங்கு வருகைதந்த மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
எனினும் 900 குடும்பங்கள் உள்ள இப்பகுதியில் கிடைக்கும் நிவாரணைகளை பிரித்துபிரித்து வழங்கிவருவதாகவும் அனைவருக்கும் ஒரே தடவையில் வழங்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் அப்பகுதி கிராம சேவையாளர் தெரிவித்தார்.
அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கிடைக்கும்போது வழங்கிவைக்கப்பட்டுவருவதாகவும் ஆனால் சிலர் இதனை குழப்பும் வகையில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் தாம் உண்மையான கஸ்ட நிலையினை எதிர்கொண்டவர்களுக்கு தனக்கு கிடைத்த நிவாரணைங்களை பகிர்ந்தளித்தாகவும் எந்தவித பக்கச்சார்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் தொழில்வாய்ப்பிழந்த அனைவருக்கும் அரசாங்கத்தினால் 5000ரூபா நிவாரணம் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்டம் 5000ரூபா வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன்,தமக்கு சிறியளவிலான நிவாரணங்களை பிரதேசத்தில் உள்ள சில வறிய குடும்பங்களுக்கு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
சிலர் தமக்கு நிவாரணம்வேண்டும் என்பதற்காக மக்களை குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.