அன்பர்களே நாம் சிந்திக்கும் நேரமிது எல்லைகளற்று நாகரீகமும் விஞ்ஞானமும் வளர்ச்சி கண்டாலும் இப்போதைய சூழ்நிலையை பாருங்கள் எவ்வளவு பணம் இருந்தும் பயன் இல்லை. நவீன வளர்ச்சிகள் இருந்தும் பயன் இல்லை உலக நாடுகள் திகைத்து நிற்கின்றது , பெறுமதியான மனித உயிர்கள் கண்இமைக்கும் பொழுதில் மடிந்து போகின்றன.
வெளிநாடுகளில் எமது கலை கலாச்சாரம் பண்டைய பண்பாடுகள் என்பன புறக்கணிக்கப்பட்டன.
இப்போதைய காலகட்டத்தில் தமிழனின் நாகரீகம் உலகில் மகத்துவம் கண்டுள்ளது.
எமது இலங்கை திருநாட்டில் நாம் பின்பற்றும் ஒரு சில நடவடிக்கைகள் இன்று எம்மை காக்கின்றது. அதில் ஒன்றுதான் சித்திரை புத்தாண்டில் மருத்துநீர் தோய்த்தல் .
இந்த நிகழ்வின் மகத்துவம் என்ன? எதற்காக மருத்துநீர் வைத்து நீராட வேண்டும்?
பண்டைய காலத்தில் பாருங்கள் சித்திரைவருடப்பிறப்பிற்கு முதல் நாளில் அனைவரும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து இறைசந்நிதிகளிலும் மருத்துநீர் காச்சி மக்களுகக்காக வழங்குவர் .
இதனால் என்ன பலன் பாருங்கள் .
எல்லா இடங்களிலும் பலவித அரிய மூலிகைகள் கொண்டு மருத்துநீர் காய்ச்சும்போது அதிலிருந்து வரும் நறுமணம், ஆவி காற்றில் கலக்கிறது இதன் மூலம் வளிமண்டலம் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் இதனை சுவாசிக்கும் மக்கள் நோய் பீடைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள்.
மருத்துநீரை வீடுகள் மற்றும் தலை உடல் முழுவதும் பூசுவதாலும் உடலுக்குள் உட்கொள்வதாலும் அனைத்துவிதமான நோய்களிலும் இருந்து எமது தேசமும் எமது மக்களும் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இதனால்தான் பண்டைய காலம் முதல் இன்றுவரை இந்து மத அனுஸ்டானங்கள் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது .
ஆகையால் இப்போதைய காலகட்டத்தில் கட்டாயம் அனைத்து இடங்களிலும் மருத்து நீர் காய்ச்சப்பட வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலையிலும் எமக்காக மருத்து நீரை காய்ச்சி எமதுமக்களுக்காக பாதுகாப்பான முறையில் இளைஞர் கழகங்கள் , ஆலயங்களின் அறங்காவலர்கள் , மற்றும் விளையாட்டுக் கழகங்கள் பாதுகாப்பாக மக்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதற்காக எம் நாட்டு அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஆலய நிருவாகிகளுக்கு இந்த நேரத்தில் ஒத்துழைப்பு நல்கவேண்டுமென வேண்டுகிறேன்.
மருத்து நீரை பெற்றுக்கொள்ளும் மக்கள் அதனை சுபநேரத்தில் விதிமுறைகளுக்கு ஏற்ப தோய்த்து நீராடி நற்பலன்களைப் பெறவும் , விரைவாக நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனின் திருவடிகளை பிரார்த்திப்பதுடன் எம்பெருமானின் ஆசி எல்லோருக்கும் கிட்டுவதாக.
ஆசி வழங்குவது :-
சிவஸ்ரீ அ.க.லிகிதராஜக்குருக்கள்
தெய்வீக கிரியாசோதி, சத்திஜோயாத சிவாச்சாரியாரும், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் கல்லடி உப்போடை ஆலய பிரதம குருக்களுமான மட்டக்களப்பு சைவ நற்பணிமன்றத் தலைவர் .
