ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மக்களின் வருகை குறைவு

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 16 மாவட்டங்களில் பொலிஸாரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 6.00மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பொருள்கொள்வனவில் மக்கள் ஈடுபட்டுவருகின்றனர்.இன்றைய தினம் குறைந்தளவு மக்களே வர்த்தக நிலையங்களுக்கு வருகைதந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை காணமுடிந்தது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள்,மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பு பொதுச்சந்தையில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் சந்தையின் பகுதிகள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம்,மட்டக்களப்பு சின்ன ஊறனி சரஸ்வதி வித்தியாலய விளையாட்டு மைதானம்,மட்டக்களப்பு உப்புக்கராச்சி பூங்கா,சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானங்களில் பிரித்து சந்தைகள் நடாத்தப்பட்டன.

இதன் காரணமாக மக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட்டதுடன் மக்கள் குறைந்தளவிலேயே இப்பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு சென்று பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

வர்த்தக நிலையங்களில் மக்கள் சமூக இடைவெளிகளை பேணியவாறு பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண பாதுகாப்பு வழங்கியுள்ளதுடன் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பில் மக்களுக்கான பொருட்கள் விற்பனைசெய்யப்பட்ட சதோச நிலையம் திறக்கப்படாமை குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த சதோச நிலையம் ஊடாக பொதுமக்கள் குறைந்த விலைகளில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவந்த நிலையில் இன்றைய தினம் குறித்த சதோச நிலையம் திறக்கப்படாமை குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.