சித்தர்களின் குரல் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிவாரணப்பணி

கொரணாவின் பரவல் காரணமாக முன்னெடுக்கப்படும் ஊரடங்கு காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களும் அன்றாடம் வேலைசெய்து தமது வாழ்க்கையினை கொண்டுசெல்பவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக சுமார் 7852 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ள நிலையில் குறித்த குடும்பங்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரியிருந்ததது.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு உதவும் வகையிலான நடவடிக்கைகளை சித்தர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்துள்ளது.

இதன்கீழ் முதல்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கஸ்டத்தின் மத்தியில் தமது கடமையினை முன்னெடுத்துவரும் குருமாறுக்கான ஒரு தொகை உலர் உணவுப்பொருட்கள் இன்று மாலை வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிவாரணங்கள் இன்று மாலை மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் வைத்து சித்தர்களின் குரல் அமைப்பின் சிவசங்கர்,ஆதித்தியன் மற்றும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய தலைவர் சிவஸ்ரீ கே.உதயகுமார குருக்கள் உட்பட ஒன்றிய உறுப்பினர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.

நாளை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சித்தர்களின் குரல் அமைப்பின் சித்தர் சிவசங்கர் தெரிவித்தார்.