மட்டக்களப்பு மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் - அதிகளவான மக்கள் பொருள் கொள்வனவில்

கொரனா தொற்றினை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அதிகளவில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சந்தை உட்பட உள்ளுராட்சிமன்றங்களின் கீழ் இயங்கும் பொதுச்சந்தைகள் இன்று மூடப்பட்ட நிலையில் வீதிகளில் விற்பனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் பொதுச்சந்தைகள் மூடப்பட்டதன் காரணமாக வீதிகளில் மக்கள் தங்களுக்குள் சமூக இடைவெளிகளை பேணிய வகையில் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றனர்.

சில இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளிகளை பேணாத நிலையில் பொலிஸாரும் படையினரும் இணைந்து அந்த நடைமுறைகளை மேற்கொண்டனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் பொருள்கொள்வனவில் ஈடுபட்டவர்கள் நீண்ட இளைவெளியில் சமூக இடைவெளிகளை பேணிய வகையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

மரக்கறி,மீன் வகைகள் உட்பட அனைத்து பொருட்களும் பற்றாக்குறையில்லாமல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டஅதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸாரினால் கொரனா தொற்று தொடர்பில் பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன்போது வீதிகளில் ரோந்துசென்று இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்த பொலிஸார் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.