வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் போராட்டம் - தொடரும் எனவும் எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

பொதுத்தேர்தலுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்ககோரியும் பட்டதாரிகள் நியமன வயதெல்லையினை 35மேல் உயர்த்துமாறு கோரியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்கா முன்பாக ஊர்வலமாக பேரணியாக சென்ற வேலையற்ற பட்டதாரிகள் மணிக்கூண்டு கோபுரம் ஊடாக சென்று மீண்டும் காந்திபூங்காவினை வந்தடைந்து அங்கு கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

உயர்த்தி உயர்த்து வயதெல்லையினை உயர்த்து,வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேதனையினை கொடுக்காதே,பிரிவினையின்றி நியமனம் வழங்கு,பொதுத்தேர்தலுக்கு முன்பாக நியமனங்களை வழங்கு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் 45வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பிரிவினைகள் இல்லாமலும் நியமனங்;கள் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு வகைகளிலும் பிரிவினைகள் காட்டப்பட்டு நியமனங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று வயதெல்லையினை 35வயதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் பல பட்டதாரிகள் வேலைவாய்ப்பினை பெறும் நிலையில்லாமல்போகும் நிலையுள்ளதாகவும் இங்கு பட்டதாரிகள் சுட்டிக்காட்டினர்.

குடந்த கால யுத்த சூழ்நிலை காரணமாக பட்டங்களை பூர்த்திசெய்வதில் பட்டதாரிகள் பல கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும் சிலர் பல வருடங்கள் கடந்தே தமது பட்டங்களை பூர்த்திசெய்யும் நிலையேற்பட்டதாகவும் வயது கடந்தும் பட்டங்களை பெற்றுக்கொண்ட தாங்களுக்கு கடந்த காலத்தில் நியமனங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதாகவும் இங்கு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

35வயதுக்கு முன்பாக தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் தமக்கான நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் 35வயதினையும் கடந்து நிற்கும் பட்டதாரிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது.

இந்த நாட்டில் ஆட்சியாளர்களாக 65வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ள நிலையில் அவர்கள் ஆட்சியாளர்களாக இருக்கவேண்டும் என்று எண்ணும்போது 35வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நாட்டில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு தகுதியற்றவரா என்ற கேள்வியை நாங்கள் கேட்கவிரும்புகின்றோம் என இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.அனிதன் கேள்வியெழுப்பினார்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் அந்த நியமனங்கள் தேர்தலுக்கு முன்பாக நடாத்தப்படவேண்டும்,அவ்வாறு வழங்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நாட்டின் அனைத்து பாகங்களிலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் தெரிவித்தார்.