இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கல் தாக்கல் -மாவட்ட செயலகத்திற்கு படையெடுக்கும் இளைஞர் யுவதிகள்

இலங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் நவேஸ்வரன் தலைமையில் இந்த வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து பெருமளவான இளைஞர் யுவதிகள் வேட்பு மனுக்கலை தாக்கல் செய்தனர்.

இலங்கை இளைஞர் பாராளுமன்றம் , இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இந்த நாட்டு இளைஞர் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்க்காக செயலாற்றி வரும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் வருகின்ற  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது.

2010ம் வருடத்தில் இலங்கையில் முதலாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற்றது.

இதுவரை நான்கு இளைஞர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றிருக்கிறது இவற்றில் முதல் இரண்டு தேர்தல்களும்  பிரதேச ரீதியாகவும் , கடைசி இரு தேர்தல்கள் தொகுதிவாரியாகவும் நடைபெற்றுள்ளன.

இம்முறை பிரதேச செயலக ரீதியாக நடாத்தப்படுவதன் காரணமாக 14 இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

விசேடமாக முதன்முறையாக இம்முறை இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் வாக்கெடுப்பு இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையில் நடாத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலத்திரனியல் வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.