பெண் என்றும் பாராமல் தாக்கிய பாதகனை அரச பணியிலிருந்தே நீக்க வேண்டும் : மா.உ. தவராஜா சீற்றம்

பெண்கள் உரிமை பற்றிப் பேசப்படுகின்ற இந்த நாட்டில் அதுவும் புத்தாண்டு தினத்தில் ஓர் பெண் என்றும் பாராமல் நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான திருமதி தவப்பிரியா தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இரக்கமின்றி மிருகத்தனமாக நடந்து கொண்ட இந்த பாதகனை அரச பணியிலிருந்தே உடனடியாக நீக்க வேண்டும். என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வே.தவராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு மாநகர சபையின் 29ஆவது சபை அமர்வானது இன்றைய தினம் (09.01.2020) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. 

 2020.01.01 அன்று புத்தாண்டு வேலை ஆரம்ப நிகழ்வின் போது நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான திருமதி. தவப்பிரியாவின் மீதான தாக்குதலை கண்டிக்கும் முகமாகவும், குறித்த பெண் மீது தாக்குதல் நடாத்திய அதிகாரியினை பதவியை நீக்கி, அவர் மீதான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை தவராஜாவினால் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பெண்களை உரிமைகள் பற்றிப் பேசப்படுகின்ற இந்த நாட்டில் அதுவும் புத்தாண்டு தினத்தில் ஓர் பெண் என்றும் பாராமல் நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடையாற்றும் பெண் உத்தியோகத்தரான திருமதி தவப்பிரியா தாக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வானது உலகத்தில் மனிதநேயத்தனை மதிக்கின்ற அத்தனை மனிதர்களாலும் கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வு. ஜனாதிபதி தனது அக்கிராசன உரையின் போது கூட பெண்களுக்கான சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதாகக் கூறியிருக்கின்றார். இவ்வாறு இரக்கமின்றி மிருகத்தனமாக நடந்து கொண்ட இந்த பாதகனை அரச பணியிலிருந்தே உடனடியாக நீக்க வேண்டும்.

குறித்த பெண்ணின் கண்ணத்தில் அறைந்தமையால் செவிப்பறை உடைந்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளாதாக அறிந்துள்ளோம். 

இச்சம்பவம் தொடர்பில் இவ்வுயரிய சபையில் ஓர் கண்டன தீர்மானத்தினை நிறைவேற்றுவதோடு, இதற்குக் காரணமான பாதகனை உடடியான பணி நீக்கம் செய்வதோடு, அவர் மீதான விசாரணையையும் முன்னெடுக்க வேண்டும் எனும்  தீர்மானத்தினையும் இணைந்து இந்தச் சபையில் நிறைவேற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதன்படி குறித்த முன் மொழிவானது உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் குறித்த கண்டனத் தீர்மானத்தினை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சுக்கும் அறிவிப்பது தொடர்பிலும் ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.