Breaking News

தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கொள்கையில்லாத கொள்கை ஒன்றே உள்ளது என்கிறார் சிவநாதன்

வடகிழக்கு இணைந்ததுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையென்றால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அவர்கள் போட்டியிட்டிருக்கக்கூடாது என தெரிவித்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கே.சிவநாதன், தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையில்லாத கொள்கை ஒன்றையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இதுவரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி,தமிழர் விடுதலைக் கூட்டணி,விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான சுதந்திர ஐக்கிய முன்னணி,பாராளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் அவர்களின் தலைமையிலான கட்சி, அதனைவிட ஏற்கனவே மாகாணசபையிலும் பாராளுமன்றத்திலும் ஆசனங்களை பெற்றிருந்த சமூகத்தில் செல்வாக்கான உறுப்பினர்களும் கூட எங்களுடன் இணைந்து போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழர்களின் அரசியலைப் பொறுத்தவரை நாங்கள் 70வருடங்களுக்கு முன்னர் பேசிய பேச்சை இன்றும் பேசுவது எம்மைப்பொறுத்தவரை அர்த்தமற்ற விடயமாகும். அதாவது களநிலைமைக்கு ஏற்றவாறு எமது அரசியலை கொண்டு செல்வதே புத்திசாலித்தனமாகும். ஆனால் எமது தமிழர்களின் அரசியல்; பிரச்சினையானது அத்தியாவசியமான பிரச்சினையாகும். நிச்சயமாக அதற்கு தீர்வு காணப்படவேண்டும். அதற்கான தீர்வை காண்பதற்கு சாத்தியமான நடைமுறைகளை நாங்கள் பின்பற்ற வேண்டும்.

ஏங்களுடைய தமிழ் மக்களின் பிரச்சினை உண்மையில் தீர்க்கப்படவேண்டுமானால் தென்னிலங்கை சிங்கள மக்களின் ஆசீர்வாதம் அவசியமாகும். அதேபோன்று தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போன்ற முக்கிய கட்சிகளின் ஆதரவு எங்களுக்குத் தேவையாகும். ஒரு கட்சியை எதிர்த்து இன்னொரு கட்சியை தூக்கி எங்களுடைய இலக்கை நாம் அடைய முடியாது.

ஆகவே இப்போதிருக்கின்ற எமது தமிழ்த் தலைமைகளானாலும் சரி இனி வரவிருக்கின்ற தலைமைகளானாலும் சரி இந்த விடயத்தை கருத்தில்கொண்டு எல்லா சிங்களக் கட்சிகளையும் சிங்கள மக்களையும் எவ்வாறு எமது புத்திசாதுரியத்தால் அவர்களை வளைத்துப் போடமுடியுமோ அவ்வாறு வளைத்துத் தான் எமக்கு சாத்தியமான ஒரு தீர்வை எட்டமுடியுமே தவிர வீரப்பேச்சு, வெட்டிப்பேச்சுகள் மூலம் தீர்வை அடைய முடியாது என்பது நிதர்சனமாகும்.

ஏன்னைப் பொறுத்தவரை அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்கள் உண்மையில் ஒரு அரசியல்வாதியல்ல. அவர் ஒரு பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தால் அவரை ஒரு சிறந்த நிர்வாகியாக நான் பார்க்கின்றேன். அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சமூகப் பிரச்சினைகளில் நேரடியாக தலையிடுகின்றார். ஒவ்வொரு திணைக்களமாக சென்று மக்களின் குறைகளை கண்டறிந்து அதற்கான தீர்வை எவ்வழியில் பெறலாமென அவர் சொல்லி வருகின்றார். அந்த வகையில் சமூகத்தைப் பொறுத்தவரை அவர் சிறந்த நிர்வாகி என கூற முடியும்.

அவர் எமது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு கண் திறப்பாரானால் அது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் விஸ்வாசத்தையும் அவரால் வெல்ல முடியும்.
ஏல்லாக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும்போது தமிழரசுக் கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அழைத்துப் பேசியிருந்தோம்.

பிள்ளையானுடன் எங்களால் ஒன்று சேர்ந்து செல்ல முடியாது என்பது  அவர்கள் கூறிய காரணமாகும். அவர்கள் கொள்கையில் தங்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கின்றனர் என கூறினர் வடகிழக்கு இணைந்த ஒரு மாநில சுயாட்சியை நோக்கியதே எங்களுடைய பயணமாகும்,இந்த நோக்கமோ கொள்கையோ அவர்களிடமில்லை என கூறியிருந்தனர்.

வடகிழக்கு இணைந்ததான ஒரு தீர்வே எட்டப்படவேண்டுமென்பதில் கிழக்குத் தமிழர் ஒன்றியமும் குறியாக இருக்கின்றது. அதேநேரம் எம்மைப்பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கொள்கையில்லை. ஏனென்றால் வடகிழக்கு இணைந்ததுதான் அவர்களின் கொள்கையென்றால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அவர்கள் போட்டியிட்டிருக்கக்கூடாது.

கிழக்கு மாகாணம் வேறு வடமாகாணம் வேறு என நாங்கள் தனியாகப் போட்டியிட்டு அதில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமென்றால் பிறகு எவ்வாறு வடகிழக்கு இணைந்த கொள்கையில் தங்கியிருக்க முடியும். இவர்களுக்கு கொள்கையில்லாத கொள்கை ஒன்றே உள்ளது என நான் கருதுகின்றேன்.


No comments