பதினொரு வருடங்களாக ஏமாற்றியுள்ளார் ஜனாதிபதி? சாணக்கியன்

அண்மையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ காணாமல் ஆக்கப்பட்ட 3000 பேருக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக குறிப்பிப்பட்டுள்ளார். போர் முடிவுற்று பதினொரு வருடங்களாக ஜனாதிபதி யாரை ஏமாற்றியுள்ளார்? என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார். சமகால அரசியல் தொடர்பாக தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் பல தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். போரின் போது இராணுவத்திடம் ஒப்படைத்த பலரும் இதில் அடங்குகின்றனர். இவ்வாறெல்லாம் உயிருடன் ஒப்படைக்கப்பட்டவர்கள் காணவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 2009 ம் ஆண்டு யுத்தத்தின் போது பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எதுவிதமான கருத்துக்களையும் சொல்லாமல் மறைத்துவிட்டு தற்போது ஜனாதிபதியானவுடன் மரணச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் மஹிந்த ராஜபக்ஷ சொல்ல வேண்டாம் என தடுத்து வைத்தாரா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.

பதினொரு வருடமாக சர்வதேசத்தையும், மனித உரிமை அமைப்புக்களையும்,  ஐ.நா.வையும், தமிழ் மக்களையும்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் ஏமாற்றி வந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது என்றும்

சர்வதேச விசாரணையை திசைதிருப்புவதற்காக இந்த மரணச்சான்றிதழ் விவகாரத்தை தொடங்கியுள்ளார்கள். மரணச்சான்றிதழ் 3000 பேருக்கும் வழங்குவதாக இருந்தால் அவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை சர்வதேசத்திற்கும், தமிழ் மக்களுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். பல வருடங்களாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் பலவிதமான போராட்டங்களை நடாத்தியுள்ளனர். சிலர் தேடித்தேடி களைத்து மரணித்த சோக சம்பவங்களும் இந்த மண்ணில் இடம்பெற்றது. அந்த நேரங்களில் எதுவிதமான பதிலை வழங்காத அரசாங்கங்கள் தற்போது மரணச்சான்றிதழ் வழங்குவதாகவும், அவர்கள் அனைவருக்கும் நஷ்டஈடு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளமையானது போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து தங்களை காப்பாற்றுவதற்கு சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளமை புலனாகின்றது எனவும்,

கடந்தகாலங்களில் நான் அரசின் பக்கம் இருந்த போது பல தடவைகளில் இது தொடர்பாக அறிவதற்கு கடிதங்களை அனுப்பியிருந்த போதும் அதுதொடர்பாக எதுவிதமான திருப்திகரமான பதில் எனக்கு வழங்கப்படவில்லை.
இனியும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமிழ் மக்களை ஏமாற்றாமல் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதுடன் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளையும் விடுதலை  செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.