வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தினை வதிவிடமாக கொண்ட வெளி மாவட்டங்களில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

நீண்டகாலமாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக தாங்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றிவரும் நிலையில் தமக்கு இதுவரையில் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லையெனவும் புதிய அரசாங்கம் தமக்கான இடமாற்றத்தினை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரச கொள்கைகளின் பிரகாரம் இடமாற்றங்களை வழங்கு,இடமாற்றங்களில் தாமதம் ஏன்?,இடமாற்றங்களை வழங்கு போன்ற வாசகங்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பொறிக்கப்பட்ட வாசகங்களைக்கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு அபிவிவிருத்தி உத்தியோகத்தர்களாக வெளி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டதாகவும் இதுவரையில் மட்டக்களப்பினை வதிவிடமாக கொண்ட தாங்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவதன் காரணமாக தாங்கள் பல கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிதாக பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட நிலையில் வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் தங்களுக்கு ஏன் மட்டக்களப்புக்கு இடமாற்றம் வழங்கமுடியாது எனவும் இங்கு கேள்வியெழுப்பினர்.

கடந்த நல்லாட்சியில் பல தடவைகள் தாங்கள் கோரிக்கைகள் விடுத்தபோதிலும் தமது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லையெனவும் இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தியிடம் மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.

வெளி மாவட்டங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் முன்னெடுப்பார் என இதன்போது அவர் உறுதியளித்தார்.