வெள்ளம் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு - ஸ்ரீநேசன் MP


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான இழப்பீடுகளை இந்த அரசாங்கம் பாரபட்சமின்றி உடனடியாக வழங்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வெள்ளப் பெருக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வெல்லாவெளிப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமத்திற்கு இன்று (11.12.2019) நேரடியாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்டதோடு, அப்பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்.

ஓவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தங்களின் போதும் வேத்துச்சேனை கிராமமானது கடுமையான வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு வரும் பிரதேசமாகவே இருந்து வருகின்றது. மழைகாலங்களில் தரைவழிப் பாதைகள் அனைத்தும் முற்றாக மூழ்குவதன் காரணத்தினால் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்படுவதோடு, இங்குள்ள மக்கள் வெள்ள காலங்களில் பாதுகாப்பாக தங்குவதற்குக் கூட பாதுகாப்பான கட்டிடம் இல்லாமல் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.

அத்துடன் வேத்துச்சேனை பிரதேசத்தில் வசிக்கின்ற பெரும்பாலான மக்களின் பிரதான ஜீவனோபாயத் தொழில்களான நெற்பயிர்ச் செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தில் 346 ஏக்கர் வயல் நிலங்கள் வரை அழிவுற்றுக் காணப்படுவதோடு, பெருமளவிலான சோளன் பயிர்ச் செய்கையும் அழிவடைந்துள்ளன.

இதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள  விவசாயிகளும் இம்முறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பட்டிப்பளை, வவுணதீவு, வெல்லாவெளி, ஏறாவூர் பற்று, கிரான், வாழைச்சேனை, வாகரை பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவிலான நெற்பயிர்ச் செய்கைகளும், சேனைப்பயிர்ச் செய்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

மேலும் கால்நடை வளர்ப்பும் அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளமையையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. இவர்களுக்கான இழப்பீடுகளை பாரபட்சமின்றி இந்த அரசாங்கம் ழுழுமையாகவும், உடனடியாகவும் வழங்க வேண்டும். 

அதேவேளை வேத்துச்சேனை பிரதேச மக்கள் வெள்ள அனர்த்த வேளைகளில் பாதுகாப்பாகத் தங்குவதற்குத் தேவையான மாடிக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு அரசாங்கமும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.