தமிழர்களுக்கு தீர்வு வழங்கும் விடயத்தில் கோத்தபாய பாதகம் -சிந்தித்து வாக்களிக்குமாறு கோரும் சம்பந்தன்

ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும். அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு பாதகமாக அமையும்.இதனை அனைவரும் உணர்ந்து தமது வாக்குகளை பயன்படுத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள்விடுத்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி,உப்போடை துளசி மண்டபத்தில் இந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.கே.சுமந்திரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,பொன்.செல்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

2005ம் ஆண்டு வடக்குகிழக்கு தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்ததன் விளைவாக மஹிந்த அவர்கள் சுமார் ஒன்றரை லெட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றார் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார்.

2005 தொடக்கம் 2015 வரை எமது மக்கள் பட்ட துயரங்கள் உங்களுக்கு நன்றாகத் தெரியும். பகிஸ்கரிப்பின் மூலமே அந்த நிலைமை ஏற்பட்டது. அவ்விதமான நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. எமது ஜனநாயக முறையைப் பயன்படுத்தி அர்த்தபுஸ்டியுடன் எமது இலக்கை அடையக் கூடிய விதத்திலே புதிதாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி பக்குவமானவராக, துவேசத்தின் அடிப்படையில் சிந்திக்காதவராக எமக்கு உதவ வேண்டியவராக இருக்க வேண்டும். அது தான் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எமக்கு உணர்த்திய பாடம்.

2015ல் மஹிந்த அரசியல் சாசணத்தை மாற்றி கட்டுப்பாடின்றி மூன்றாவது முறை போட்டியிட்டார். அமெரிக்காவில் கூட ஒருவர் இரு முறைதான் இருக்க முடியும். அவ்விடயத்தை தனது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்தை தனது கைக்குள் வைத்துக் கொண்டு சர்வாதிகார ஆட்சியைத் தொடர்வதற்காக மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். தமிழ் மக்கள் அதை விரும்பவில்லை. அவர் தோல்வியடைந்தார். மைத்திரிபால சிறிசேன நான்கரை லெட்சம் வாக்குகளால் வெற்றி பெற்றார். மைத்திரிபால சிறிசேனவிற்கு வடக்குகிழக்கில் விழுந்த வாக்குகள் சுமார் ஆறரை லெட்சத்து ஐம்பதாயிரம். தமிழ் மக்கள் அவருக்கு பெருவாரியாக வாக்களிக்காதிருந்தால் அவரால் வென்றிருக்க முடியாது. இதனை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலிலும் சிங்களப் பிரதேசங்களில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கின்றது. எதிர்வரும் தேர்தல் முடிவு தமிழ் மக்களின் வாக்கில் தான் தங்கியிருக்கின்றது என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. எனவே நாங்கள் தெளிவாக முடிவெடுத்து செயற்பட வேண்டும்.

கோட்டாபய தனது தமையனின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது அவர் எவ்வாறு செயற்பட்டவர் என்று அனைவருக்கும் தெரியும். ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் போன்றவர்களை யார் கொலை செய்தது. இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பிள்ளையான் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கான காரணம் என்ன? அதன் நோக்கம் தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக, தமிழ் மக்களை அடக்குவதற்காக. இவ்வாறான சிந்தனை கொண்டு செயலாற்றுகின்றவர்களை நாங்கள் ஆதரிக்க முடியுமா? மாணவர்கள், ஊடகவியலாளர், அரசியல்வாதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சாதரண பொதுமக்கள் எனப் பலரும் கொலை செய்ய்பட்டார்கள். எந்த விடயம் சம்மந்தமாக உரிய விசாரணை நடைபெற்றது. தண்டனை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்கள் மக்கள் ஆட்சி இன்றி முழுமையான அட்டூழியம் நடாத்தி மக்களை துன்பப்படுத்தினார்கள். 13வது திருத்தத்தை மாற்றி அதிகாரத்தைக் குறைப்பதற்கு முயற்சித்தார்கள். எமது செயற்பாடுகளால் அது தடுக்கப்பட்டது. இவ்விதமான ஒருவர் நமக்கு முறையான அரசிற் தீர்வினைத் தருவாரா?

அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான் அரசியற் தீர்வினைத் தருவேன் என்று அவரது விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கின்றாரா? அரசியற் தீர்வு சம்பந்தமாக எதையும் சொல்லியிருக்கின்றாhh? இல்லை, அவ்வாறான ஒருவருக்கு நாங்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும்.

சஜித் பிரேமதாச பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். அவர் ஒரு துவேசவாதியல்ல, அவரது தகப்பனும் ஒரு துவேசவாதியல்ல. ஒரு இனவாதியல்ல. தேர்தல் அறிவிப்பின் பின் சஜித் பிரேமதாசவை நான் சந்தித்த போது என்னிடம் கேட்டார் நீங்கள் என்னவிதமான அரசியற் தீர்வை எதிர்பார்க்கின்றீர்கள் என்று.

நான் சொன்னேன் தங்கள் தந்தை சொன்னார் என்னால் ஈழம் தர முடியாது ஆனால் ஈழத்தை விட எல்லாம் தருவேன் என்று. அதேபோன்று இன்று நாங்கள் ஈழத்தைக் கேட்கவில்லை. எல்லாம் கேட்கின்றோம். அதியுச்ச அதிகாரப் பங்கீட்டைக் கேட்கின்றோம். எமது மக்கள் தங்கள் சொந்தப் பிரதேசங்களில் தாங்களின் தீர்மானத்தை நிறைவேற்ற அமுல்ப்படுத்தக் கூடிய நிலைமை இருக்க வேண்டும். கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், காணி. பாதுகாப்பு, பொலிஸ் அதிகாரம், விவசாயம் நீர்ப்பாசனம், கைத்தொழில், கடற்தொழில், கால்நடை போன்ற மக்கள் வாழ்வோடு சம்மந்தப்பட்ட விடயங்களின் அதிகாரம் பங்கீடு செய்யப்பட்டு. எமது மக்களினால் ஜனநாய ரீதியாகத் தெரிவு செய்யப்படும் தலைவர்களினால் அந்த விடயங்கள் சம்மந்தமாக சட்டத்தை ஆக்குகின்ற, நிர்வகிக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி உறுதியான வகையில், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வகையில் அந்த அதிகாரப் பங்கீடு இருக்க வேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு.

அந்தப் பயணத்தை நோக்கி நாங்கள் நியாயமான தூரம் பயணித்து விட்;டோம். 2018 ஒக்டோபர் குழப்பம் ஏற்பட்டிருக்காவிட்டால் எம்மால் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் சாசணம் முழுமை அடைந்திருக்கும். அதனைக் குழப்புவதற்காகத்தான் அதற்கு தாமதத்தை ஏற்படுத்தி குழப்பத்தை உருவாக்கினார்கள். அதனை நிறைவேற்றும் ஜனாதிபதி வரவேண்டும். யார் அந்த ஜனாதிபதி? சஜித் பிரேமதாசவா? கோட்டாபய ராஜபக்ஷவா? இது எம்மத்தியில் இருக்கின்ற கேள்வி. கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் அரசியற் தீர்வு சம்மந்தமாக எதையும் செய்வாரா? எதையும் செய்யும் பக்குவம் அவருக்கு இருக்கின்றதா? தேர்தல் விஞ்ஞாபனத்தில் நான் செய்வேன் என்று சொல்லியிருக்கின்றாரா? ஒன்றும் சொல்லவில்லை. அதைவிட தான் செய்த தவறுகளை மன்னியுங்கள் என்று அது தொடர்பில் மன்னிப்புக் கேட்கின்றேன் என்று சொல்லியிருக்கின்றாhரா? அதுவும் இல்லை. பழைய விடயத்தைப் பேசாதீர்கள் மறந்து விட்டு வாருங்கள் என்கிறார். இந்தப் பாதை எங்கு சென்று முடியும்.

2005 தொடக்கம் 2015 வரை நாங்கள் கடந்து வந்த பாதைகளைப் பார்க்கும் போது இந்தப் பயணம் எங்கு முடியும்.

எனவே இது அதி முக்கியமான தேர்தல். எனவே தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும். எமது இனத்தவர், உறவுகள், பொதுக்கள் எல்லோரையும் வாக்களிக்க ஊக்குவித்து, வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், நாங்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு அவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் சென்ற 2015 நடைபெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன சார்பாக 82 வீத வாக்குகள் விழுந்தது. இம்முறை இதனைத் 90 வீதமாக அதிகரித்து திறமான வெற்றியைக் காட்ட வேண்டும். இந்தத் தேர்தலில் தனித்துவமான பங்களிப்பைச் செய்யக் கூடிய தைரியம் எமது மக்களிடம் இருக்கின்றது. அதனை நீங்கள் தவறாமல் துணிந்து வாக்களிக்க வேண்டும். நமது குறிக்கோள் நிறைவேற்றப்பட்டால் முன்னேற்றம் ஏற்படும்.

எமது போராட்டத்தில் நாங்கள் பல முன்னேற்றங்களைக் கண்டிருக்கின்றோம். 13வது திருத்தம், மங்கல முனசிங்க தீர்வு, சந்திரிக்கா காலத்தில் கொண்டு வரப்பட்ட தீர்வை, மஹிந்த காலத்தில் 2006ம் ஆண்டு அவரே சர்வகட்சி மாநாட்டில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்றும் அந்த அந்தப் பிரதேச மக்களுக்கு அவர்களது அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அது அவர்களது உரிமை என்று அவர் தெரிவித்தார். ஆனால் செய்யவில்லை. அதைத்தான் இன்று நாங்கள் கேட்கின்றோம். ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல், நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும். அதனை நாங்கள் பெறுவதாக இருந்தால், அதனை நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால். எமது நியாயமான நிலைப்பாட்டை உணர்ந்திருக்கும் சர்வதேச சமூகம் எங்களுடன் இருக்கினற போது இவற்றை நிறைவேற்றுவதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவது அதற்கு உதவாது, அதற்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை உணர்ந்து, எல்லோரையும் உணர வைத்து, எல்லோரும் ஒற்றுமையாகச் சேர்ந்து, வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.