மட்டக்களப்பில் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடி,உப்போடையில் வீதியை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கல்லடி,உப்போடை இசைநடனக்கல்லூரி வீதியில் வசிக்கும் பொதுமக்களே இன்று பகல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் உள்ள தமது வீதியில் தற்போது பயணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த மழைபெய்துவருவதன் காரணமாக தமது பகுதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் பயணிக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

குறித்த வீதியால் செல்லும் மாணவர்கள் பாதணிகளை கழற்றியே பயணிப்பதாகவும் தினம் அலுவலகம் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வரே மிக முக்கியத்துவம் மிக்க இந்த பாதை உமது கண்ணுக்கு தெரியவில்லையா,பள்ளமும் குழியுமாகவுள்ள எமது பாதையை புனரமைத்து தாருங்கள் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்திருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் குறித்த வீதியை புனரமைத்து நீண்டகாலமாக உள்ள பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.