திருநங்கைகள் பாலியல் அடிமைகள் அல்ல, வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதிகம்.




(சசி துறையூர் )

கலைஞர் கருணாநிதி மீது பலருக்கு அரசியல் வாதியாக  உடன்பாடு இருக்குமா?  இல்லையா?  என்பதை விட கலைஞராக, ஒரு கவிஞனாக, எழுத்தாளராக, இயக்குனராக, அவர் மீது உலகத் தமிழர் எல்லோருக்கும் மிகுந்த அபிமானம் உண்டு .


மூன்றாம் பாலினத்தவர் அல்லது அரவாணிகள் எனப்படுவோருக்கு திருநங்கை என நாமாம் கொடுத்து அவர்களை அங்கீகரித்து, அவர்களை அர்த்தப்படுத்தி ,  அழகு பார்த்தது என்னவோ கலைஞர்தான் அந்த வகையில் தமிழ் கூறும் நல்லுலகம் உள்ள  வரை கலைஞர் வாழ்வார்.

திருநங்கைகள் எனப்படுவோர் யார்?
இவர்கள் ஏன் மூன்றாம் பாலினம் என அழைக்கப்படுகின்றனர்?

திரு நங்கைகள் இந்த பூமியில் பிறந்தவர்கள்தானே அவர்களும் சமமாக சமத்துவமாக வாழ வேண்டியவர்கள்தானே?  அவர்கள் சமூகத்தாலும் அவர்களது குடும்பத்தாலும் புறம் தள்ளப்பட காரணம் என்ன ? 

ஆசிய நாடுகளில் இன்று பேசுபெருளாக உள்ள சமூக பிரச்சினைகளில் ஒன்று திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம்.


திருநங்கை இயல்பு என்பது ஒருவிதமான பிறழ்வு நடத்தை அல்லது மனநோய் என்ற மடமைக்கு அமெரிக்க உளவியலாளர்கள்தான் விடை கொடுத்திருக்கிறார்கள்.




திருநங்கை நடத்தை வெளிப்பாடுகள்  அது மனநோயோ அல்லது பிறழ்வானநடத்தையோ அல்ல அது இயற்கையானது பசி , துக்கம் , பாலியல் இச்சை  ஒரு மனிதனுக்கு எவ்வாறு இயல்பானதே,  அவசியமானதோ அதே போன்றுதான்  பருவத்தில் ஏற்படும் உளஉடல் மாற்றம் தான் சிலருடையே மூன்றாம் பாலின பரிமானம்  என விஞ்ஞான ரீதியாக நிருபனம் செய்தார்கள் அமெரிக்க உளவியலாளர்கள். 

அதனால்தான் இந்த அரவாணிகள் சமூகம் உலகலாவிய ரீதியிலும் எம் மத்தியிலும்  நிலைபெற காரணமாகிறது.

ஆன போதும் எம்மிடையே திருநங்கைகள்/திருநம்பி தொடர்பான சரியான புரிதல் இன்மையால் அவர்களை வீட்டிலிருந்து சமூகத்திலிருந்து வெறுக்கவும் ஒதுக்கவும் அவர்கள்மீதான வன்முறைகளை கட்டவிழ்த்து விடவும் செய்கிறோம்.

ஆணாக பிறந்து வளர்ச்சிப்போக்கில்  பெண்ணாக தன்னை வெளிப்படுத்திக்கொள்பவர்கள் திரு நங்கைகள் எனப்படுகின்றனர்.  

இதற்க்காக சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்கின்றனர்.
திருநங்கைகளால் கர்ப்பம் தரிக்க முடியாது. தற்காலத்தில் திருநங்கைகளும் கருத்தரிப்பதற்க்கான வைத்திய பரிட்சாத்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் உண்டு.


திரு நம்பி எனப்படுவோர் பெண்ணாக பிறந்து ஆணாக தம்மை வடிமைத்துக்கொள்வோர் அல்லது வெளிப்படுத்துவோர் எனலாம்.




திரையில் தெருவோரமாக அரையும் குறையுமாக
பாலியல் தொழிலாளிகளாக மாத்திரமே  சித்தரிக்கப்படுபவர்கள் தான் இந்த அரவாணிகள்.


அதனால்தான் என்னமோ நம்மில் பலர் அரவாணிகள் தொடர்பாக பல தவறான கருதுகோளுடன் இருக்கிறோம் இல்லையா?

அரவாணிகளும் மனிதர்கள் தான் அவர்களும் இந்த பூமியில் வாழவே பிறந்தவர்கள். அவர்களுக்கும் ஒரு குடும்பம் தாய் தந்தை உடன் பிறந்த சகோதரர்கள், சகோதரிகள் இருக்கிறார்கள்.



திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் உடல் உள வளர்ச்சி மாறுதல் மாற்றங்களால் தம்மை  பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.

இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.

அரவாணிகள்,  அரவாணிகள் சமூகம் தென்னாசிய கண்டத்தில் தமது வாழ்வியல் சீரழிவுகளை தினமும் வேதனையோடு  எதிர்கொள்பவர்கள். தமது அன்றாட சீவனோபாயத்திற்க்கு படும் அல்லல் நிறைந்த போராட்ட வாழ்வு பெரும் துன்பியல் கதை.




அரவாணிகள் வாழ்வியல்  தொடர்பாக சிந்திக்க கடந்த (ஒக்டோபர்) ஜப்பசி மாதம்  என் வாழ்வில் திருநங்கை ஒருவரை முதல்தடவையாக  கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில்   சந்திக்க
கிடைத்த வாய்ப்பை  மறக்க முடியாது, அந்த ஆச்சரியமான  அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..


ஒதுக்கப்பட்டவர்கள் தான் நாங்கள்,  ஆனால் மூலையில் ஒதுங்கிவிடவில்லை மூடர் கூட்டத்தை முட்டி மோதி எங்களுக்கான அடையாளத்தை பெற்றிருக்கிறோம்., 

ஆம் மூன்றாம் பாலினம் என்று அழைக்கப்படும் திருநங்கைகள்  பாலியில்பிலிருந்து மாறும் போது  பெண்,  அல்லது  ஆண் என எமது  பாலினத்தை குறிப்பிட்டு தேசிய ஆள் அடையாள அட்டையை பெற்றிருக்கிறோம் மிக அண்மையில்தான் அது சாத்தியமாகியிருக்கிறது.


இலங்கையில் எமக்குபோதுமான திருப்தி நிலை இருக்கிறது இந்தியா போன்ற தென்னாசிய நாடுகளில் எம்மை போன்றவர்களின் நிலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது., 

தென் இந்திய திரையுலகம் சற்று விதிவிலக்ககானது,  திரைப்படங்கள் சில எம் சமூகம் மீது பரிகாசம் காட்டியது , காட்டுகிறது என்கிறார் பூமி.

இலங்கையில் 2018ம் வருட கணக்கெடுப்பின் பிரகாரம் 23000 திருநர், திருநங்கைகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் உண்மையில் எனது கணிப்பின் பிரகாரம் இதனைவிட அதிகமாகவே இலங்கையில் உள்ளார்கள் என தனது வாழ்வியல் கதைகளை கூறத்தொடங்கினாள் பூமி ஹரேந்திரன்.


சரளமாக ஆங்கில சிங்களமொழிகளை பேசும் புலமை கொண்ட பூமி தமிழில் தான் தனது அறிமுகத்தை செய்தாள் . 

தான் காளிபக்தையாக இருக்கின்ற போதும் கெளதம புத்தரின் போதனைகளை கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறாள்.


தென் இந்தியாவின் திருநொல்வேலியை சேர்ந்த தனது தகப்பனாரின் தந்தை தென்னிலங்கையில் மணமுடித்ததாகவும் அதன் வழியில் தனது தந்தை தமிழ்பேசும் இந்து,  தாய் சிங்கள மொழிபேசும் கிறிஸ்தவர் என்றார்.


தான் பொற்றோருடன் இருக்கும் வரை பாதுகாப்பாக, சந்தேசமாக உயர்தரம் வரை கல்வி கற்றதாகவும் கூறி அதன்பின்னரே தனது வாழ்க்கை திசைமாறிப்போனதாகவும் பகிர்ந்தாள்.


உயர்தரம் வரையே கல்வி கற்ற பூமி சரளமாக மூன்று மொழி பேசுகிறாள், விஞ்ஞானம்,  அறிவியலை கற்றுத்தேர்ந்தவளாக பேசுகிறாள், நம்பிக்கையும் சுய தத்துணிவும் கொண்டவள் என்பதை பேச்சில் நிருபிக்கிறாள், தான் சார் சமூகத்துக்கு பலதை செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் கொண்டவளாக தன்னை நிருபிக்கிறாள்.


பூமியோடு உரையாட கிடைத்த நேரம் குறுகியது பலவருடத்தில், பல மணித்தியாலயத்தில் கிடைக்க தெரிந்துகொள்ளக்கூடிய விடயங்களை ஒரு மணிநேரத்திற்கும் குறைவான பொழுதில் அசாத்தியமாக பகிர்ந்தாள் எங்களோடு பூமி.




ஆம் உண்மை . உண்மையை உண்மையாக சொன்னாள் பூமி.  அவள் சொன்ன விஞ்ஞான விளக்கத்தையும் தத்துவத்தையும் என்னால் அப்படியே ஒப்புவிக்க  இயலாது,  அதை நான் என் இயலாமை என்றுதான் ஒப்புக்கொள்கிறேன்.,


பூமி சொன்ன பலவிடயங்கள், நாம் ஒவ்வொருவரும்  தெரிந்து கொள்ளவதுடன் தெளிவும் பெற வேண்டியது.

திருநங்கை என்னும் இயல்பானது அது வேண்டுமென்றோ அல்லது புத்தியில்லாத அறியாமையினாலோ ஏற்படுவது அல்ல அது இயல்பானது இயற்கையானது அதுவும்  மூளையின் ஒரு வகையான செயற்பாடு உடற் சுரப்புக்களால் ஏற்படுவது. 


பசி,  தூக்கம், எவ்வாறோ அதே போன்றுதான் ஒரு ஆண் குறிப்பிட்ட (15 /16) வயதை அடைகின்ற போது தனது இயல்பில் இயற்கையாக ஏற்படுகின்ற உடலியல் மனரீதியாக ஏற்பாடுகின்ற மாற்றத்தால் தன்னை பெண்ணாக  வடிவமைத்துக்கொள்கிறாள்.

இங்குதான் முரண்பாடு முற்றுகிறது பாசப்போராட்டம் பரிதவிக்கிறது  பதினைந்து பதினாறுவயதுவரை பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக, குடும்பத்தோடு உற்றார் உறவினர் உடன் பிறந்த சகோதரர்களோடு  மகிழ்ச்சியாக வாழ்க்கை கடக்கின்ற பருவத்தில் ஏற்படுகின்ற மாற்றம் பெற்றோருக்கும் ஏற்றுக்கொள்ள சகிக்க முடியாத ஒன்றாகி விடுகிறது.


இந்த இடத்தில் ஏற்படும் சிக்கல் பெற்றோர் மனமுடைந்து சமூகத்துக்கு பயந்து தனது பிள்ளைக்கு இவ்வாறு ஆகிவிட்டதே சமூகம் பழிக்குமே அவமானமாகிடுமே தமது மற்றப்பிள்ளைகளுக்கு இதனால் பல பிரச்சினைகள் ஆகிவிடுமோ என்ற கவலையில் தாம் தற்கொலைக்கு செல்லும் முடிவெடுப்பர், குறித்த பிள்ளையை வீட்டை விட்டு வெளியேற்றுவர் அல்லது தனிமைப்படுத்தி வீட்டில் சிறைப்படுத்துவர்.


இன்னும் சிலர் தமக்கு இவ்வாறான இயல்பு உள்ளது என்பதை மறைத்துக்கொண்டு திருமணம் செய்வதை மறுத்துக்கொண்டு வாழ்வர், இன்னும் சிலர் பெற்றோரின் வற்புறுத்தல் சமூகத்தின் அவப்பேச்சுக்கு தப்புவதற்க்காக திருமணம் செய்துகொள்வர். 

அவ்வாறு திருமணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பல , பாரிய குடும்ப சிக்கல் நிலை ஏற்படுத்தி விவாகரத்து வரை சென்றிருக்கிறது.


ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடியுமா?
பாலியல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா ? இதுவே தான் மூன்றாம் பாலினத்தன்மையை மறைப்பதனால், பெற்றோர் கட்டாயப்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சினை.


இன்று எம் சமூகத்தில் பலர் இத்தகைய இயல்புகளை மறைத்துக்கொண்டும் வாழவும் கூடும்,வாழ்கிறார்கள்.  
திருமணம் வேண்டாம் என்போரை கட்டாயப்படுத்த வேண்டாம். என்கிறார் பூமி அவர்களது உணர்வுகளை தேவைகளை புரிந்துகொள்ளுங்கள் அவர்களையும் அவர்களது போக்கில் வாழ விடுங்கள் என்றார் .




வடகிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும் அவற்றிலும் யாழ்ப்பாணத்தில் திருநங்கைகள் அதிகளவில் இருக்கிறார்கள் இலங்கையை பொறுத்தவரை கொழும்பு கம்பஹாவில் மிகவும் அதிகளவானோர் வசிக்கின்றனர்.


கொழும்பு கம்பஹாவில் உள்ளவர்கள் இதே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் வந்து சேர்ந்தவர்கள். 


பெற்றோரினால் வீட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிவந்தவர்கள் வந்து சேர்ந்த இடமே கொழும்பு கம்பஹா.


இளம் வயதில் வீட்டை விட்டு வருவதனால் வயிற்றுப்பசிக்காக பாலியல் தொழிலொன்றே அவர்களுக்கு கதி,  அடுத்தவரின் பாலியல் தேவை பூர்த்தியே திருநங்கைகளுக்கான வயிற்றுப்பசி போக்கியது. இதன் மூலம் ( 500) ஜநூறோ எழுநூறே தான் கிடைக்கும் அதுகூட சில நேரங்களில் கிடைக்காது தேவை முடிந்ததும் வெறும் அடியும் உதையும் கிடைக்கும்.


இன்று பாலியல் சார் நோய் நிலமைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் திருநங்கைகள்தான் காரணம் என்று பரவலான குற்றச்சாட்டும் சுமத்தப்படுகிறது.
அவர் அவர் பாதுகாப்பை அவர்களே
உறுதிப்படுத்திக்கொண்டால் தீங்கு யாருக்கும் ஏற்படப்போவதில்லை.


எது எவ்வாறோ நாம் அதனிலிருந்து விடுபட எமது சமூகத்தை பாதுகாக்க அமைப்பொன்றை நிறுவி அதன் மூலம் திருநங்கைகளுக்கு நன்நம்பிக்கை ஊட்டி தங்களை தற்காத்து கொள்வதற்க்கான பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.


சில அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் எமங்கு மனமுவந்து பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்களை வழங்கி  உதவுகின்றன. பலருக்கு தையல், ஆடை வடிவமைப்பு,  அழகுக்கலை போன்ற பயிற்சிகளை வழங்கி கொண்டு வருகிறோம்
இலங்கையில் எமக்கான ஓர் அமைப்பு உண்டு "The National Transgender Network srilanka "அதில் நான் நிறைவேற்று செயலாளராக செயற்பட்டு வருகிறேன்,.


 இப்போது கூட நான் எனது சமூகத்தின் தேவைக்காக ஜனாதிபதி வேட்பாளரை சந்தித்து கலந்துரையாடிவிட்டே வருகிறேன், எதிர்காலத்தில்   அரசியலில் பேரம் பேச  தேர்தலில் போட்டியிட எமக்கும் அபிலாஷை உண்டு என்கிறார் பூமி.


மூன்றாம் பாலினத்தவர் தொடர்பாக யாரும் தவறான தீர்மானத்துக்கு வந்துவிட வேண்டாம் உங்களில் சிலர், உங்களது குடும்பத்தில் ஒரிருவர் மறைந்து கொண்டு வாழலாம் தயவுசெய்து அவர்களை அவர்களது போக்கில் வாழ விடுங்கள், அவர்களிடம் பலதிறமைகள் மறைந்தும் இருக்கிறது ,  அவர்களுக்கு உதவ நானும் எனது அமைப்பும் தயாராக இருக்கிறோம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என உருக்கமாக கேட்கிறார் பூமி.







  முதல் தடவையாக ஒரு திருநங்கையை சந்திக்க கிடைத்தது நம்பிக்கையோடு அவள் பகிர்ந்த தனதும் ,தனது சமூகம் சார் வாழ்வியல் நிதர்சனங்கள் ஆச்சரியமும் ஆர்வத்தையும் தூண்டியது அந்த வகையில் எனது தேடலில் மேலும்  சிக்கிய சில விடயங்களை பகிர கிடைத்தது.

நன்றி பூமி ஹரேந்திரன் 





களம் :- 

 வடகிழக்கு தமிழ் இளைஞர் சேவை அதிகாரிகளுக்கான HIV /AIDS தொடர்பான பயிற்சியாளர்களை பயிற்றுவிக்கும் செயலமர்வு.  இலங்கை மன்ற கல்லூரி ,கொழும்பு இலங்கை.

 சுகாதார அமைச்சின்  தேசிய STD/ AIDS கட்டுப்பாட்டு பிரிவு.


செய்தி ஆக்கம் :- 

கணேசமூர்த்தி சசீந்திரன் 
துறைநீலாவணை .