மட்டக்களப்பில் பல்வேறு பகுதிக்கும் பிரதமர் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை மட்டக்களப்பு நகரில் உள்ள பிரசித்திபெற்ற ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து அங்கு வழிபாடுகளை மேற்கொண்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மட்டக்களப்புக்கு நேற்று வருகைதந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றார்.

மட்டக்களப்பில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதந்து அங்கு வழிபாடுகளை மேற்கொண்டார்.

ஆலயத்திற்கு வருகைதந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினர்,ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் வரவேற்றதுடன் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர்.இந்த விஜயத்தின்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இணைந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு ஆயர் இல்லத்திற்கு சென்ற பிரதமர் அங்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சந்திப்பினை தொடர்ந்து ஊறணி சந்தியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அங்கு பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் அங்கு கட்சி ஆதரவாளர்களுடனும் கலந்துரையாடினார்.

ஆதனை தொடர்ந்து கறுப்பங்கேணியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அங்கும் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடியதுடன் பிரசார பணிகளையும் முன்னெடுத்தார்.