பெரியபோரதீவு பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு –ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இலங்கையின் மதுரை மீனாட்சி ஆலயம் என்ற பெருமையினைப்பெற்றதும் கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையானதும் வரலாற்றுசிறப்புமிக்கதுமான மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்களில் தினமும் விசேட பூஜைகள் நடைபெற்றுவந்தன.

கடந்த 06ஆம் திகதி அம்பாளின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் நேற்று முன்தினம் அன்னையின் ஊர்காவல் திருஉலா நடைபெற்றதுடன் நேற்று அன்னையின் சக்தி மகா யாகம் மற்றும் நோற்பு கட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று காலை அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து தீமிதிப்பு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்றைய தீமிதிப்பு உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தீமிதிப்பினை தொடர்ந்து அம்பாளின் மஞ்சள் குளிக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் தேவாதிகளின் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வுகளும் நடைபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற சக்தி பூஜையுடன் வருடாந்த திருச்சடங்கு நிறைவுறெ;றது.

பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம் மதுரை மீனாட்சி ஆலயத்தினை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.