நாவற்குடாவில் சுவிஸ் அமைப்பு ஊடாக குடிநீர் விநியோக திட்டங்கள்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் கடந்த நான்கு தினங்களில் பல்வேறு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் கஸ்டங்களை எதிர்நோக்கும் நான்கு குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வு மாலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா,பூநொச்சிமுனை ஆகிய பகுதிகளில் இந்த குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் கே.துரைநாயகம் அவர்களின் பிள்ளைகளான விஜி,சுஜி ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் இந்த குடிநீர்விநியோக திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

இதனை கையளிக்கும் நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் வறிய நிலையில் உள்ள பிள்ளைகள் மற்றம் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கான பல்வேறு உதவி திட்டங்கள் இந்த வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.