மட்டக்களப்பு சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு

முல்லைதீவு நீராவியடி பகுதியில் நேற்று சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டத்தினை மீறி செயற்பட்டதை கண்டித்தும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தினால் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.


இன்று காலை மட்டக்களப்பு நீதின்றங்கள் அனைத்தின் செயற்பாடுகளிலும் ஈடுபடும் சட்டத்தரணிகள் இன்று காலை தொடக்கம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

முல்லைதீவு நீராவியடியில் நீதிமன்ற கட்டளையினையும் பொருட்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த சட்டத்தரணிகள் அச்சந்தர்ப்பத்தில் சட்டத்தரணிகள் இருவர் தாக்கப்பட்டதற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே.நாராயணபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.

நீதிமன்றத்தினை அவமதிக்காதே,சட்டத்தரணிகள் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்,நீதிமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாருங்கள்,நீதியை எரித்துவிடாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இன்று சட்டத்தரணிகள் பணி பகிஸ்கரிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.