ஐ.தே.கட்சிக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்கமுடியும் -தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கேள்வி

தமிழர்கள் அரசியல் அதிகாரத்திற்காகவும் நிர்வாகத்திற்காகவும் மாற்று அரசியல் தலைமைகளிடம் ஓடவேண்டிய நிலைமையும் தங்களது இருப்பிடத்தைப் பாதுகாப்பதற்காக நாளாந்தம் போராட வேண்டிய நிலைமையிலும் இருக்கின்ற சூழலில் நான்கரை வருடங்களாக எதனையும் செய்து கொடுக்க முடியாத ஐக்கிய தேசியக் கட்சி அரசிற்கு எந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க இருக்கின்றது என்பது மக்களிடம் கேள்விக்குறியாக இருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்து முட்டுக்கொடுக்கும் செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கப்படும் எனவும் தமிழர்களுக்கு எதனையும் பெற்றக்கொடுக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியினால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும் எனவும் இதன்போது பிரசாந்தன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

இன்றைய சூழலில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் போன்ற பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் தமிழர்களை கரைசேர்க்கும் அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் குறிப்பிடப்பட்டு மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்ட அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சகல விடயங்களிலும் காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கு மக்களிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியாமல் நான்கரை வருடங்கள் கடந்திருக்கின்றன. மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தல் வரவிருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று கட்சிக்குள் ஜனநாயக முறையில் தேர்வு செய்ய முடியாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூறிக்கொண்டிருக்கின்ற நிலைமையில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்ற விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னும் இழுபறி நிலையே இருந்துகொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதிலேயே கட்சிக்குள் ஆர்ப்பாட்டம் செய்து போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கின்ற ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி புரையோடிப்போயிருக்கின்ற தமிழர்களின் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை பெற்றுக்கொடுக்கப் போகின்றது?

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அரசியல், நிர்வாக ரீதியாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமையில் ஒரு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தொடர்ந்து உண்ணாவிரதமும் சத்தியாக்கிரக போராட்டங்களும் நடத்தி இன்னும் முடியாமலிருக்கின்ற கல்முனை பிரதேச செயலகம் தொடக்கம் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியாமல் இருக்கின்ற ரணில் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்கின்ற நிலைமையினை எவ்வாறு இவர்களால் உறுதிப்படுத்த முடியும்?

இலங்கை தனது இறைமையினை இழந்துகொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாகும். ஒட்டுமொத்தமாக நாடு சீரழிந்துகொண்டு இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் அரசியல் அதிகாரத்திற்காகவும் நிர்வாகத்திற்காகவும் மாற்று அரசியல் தலைமைகளிடம் ஓடவேண்டிய நிலைமையும் தங்களது இருப்பிடத்தைப் பாதுகாப்பதற்காக நாளாந்தம் போராட வேண்டிய நிலைமையிலும் இருக்கின்ற சூழலில் நான்கரை வருடங்களாக எதனையும் செய்து கொடுக்க முடியாத ஐக்கிய தேசியக் கட்சி அரசிற்கு எந்த அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க இருக்கின்றது என்பது மக்களிடம் கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இன்று தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாப்பதற்காக ஓடிக்கொண்டிருப்பது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது.

கடந்த நான்கரை ஆண்டுகளில் நடந்த மோசமான சம்பவங்கள், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒதுக்கீடுகள் 2017ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 8ஆந் திகதி அமைச்சரவை தீர்மானத்தில் நிறைவேற்றப்பட்ட 9473மில்லியன் ரூபாய்களில் எந்தப் பணமும் இன்றுவரை மட்டக்களப்பிற்கு வரவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியையும் நல்லாட்சியையும் பாதுகாத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் அதைக்கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இவ்வாறான சூழலில் எவ்வாறு ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை சூறையாடலாம் என்பதில் குறியாக இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களை மாற்றிக்கொண்டு மக்களுக்கான Nசுவையை வழங்க முன்வர வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்தமாக மக்களிடமிருந்து இவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது கிழக்கு மாகாணத்தை பாதுகாக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கின்ற தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் பயணிக்கின்ற கட்சியாகும்.

கிழக்கு மாகாணத்தை பாதுகாக்க வேண்டுமானால் மத்திய அரசில் அமைகின்ற நாடாளுமன்றமும் நாட்டின் ஜனாதிபதியும் கிழக்கு மாகாணத்தை பாதுகாக்க வேண்டுமென்ற சிந்தனையில் இருப்பவராக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது இம்முறை புத்திஜீவிகளையும் துறைசார் அதிகாரிகளையும் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வாறான செயற்பாடுகளை சேர்க்க வேண்டும்,கிழக்கு மாகாணத்தில் எவ்வாறான செயற்பாடுகளை ஜனாதிபதி செயற்படுத்த வேண்டுமென்ற விடயங்களை தயார்படுத்தி இருக்கின்றோம்.எதிர்காலத்தில் அது சம்பந்தமாக பேச இருக்கின்றோம்.