எமது அமைப்பின் பெயரை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை –சுவிஸ் உதயம் எச்சரிக்கை

தமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி சிலர் செயற்பட்டுவருவதாகவும் அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் சுவிஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் அம்பலவாணர் ராஜன் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பு,கல்லடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய தினம் இணையத்தளத்தில் சுவிஸ் உதயம் அமைப்பைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏனெனில் கடந்த ஓரிரு வாரத்திற்குள் நாங்கள் செய்த வேலைகள், மக்களுக்கு ஆற்றிய சேவைகள், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய பல்வேறு உதவிகள் என்பவற்றை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் விஷமத்தனமான உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் எமது அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இந்த செய்திகளை வெளியிட்டதை சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் என்ற ரீதியில் நான் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
அங்குள்ள ஒரு சிலர் அவர்களின் பதவி ஆசைகளுக்காகவும் மற்றும் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சாட்டி எம்மை இந்த அமைப்பிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றும் நினைத்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். கணக்கறிக்கைகள் காட்டப்படவில்லை என்றும் எந்தவொரு விடயத்திலும் உண்மை இல்லை என்றும் இவர்கள் கூறுகின்றார்கள்.
நாங்கள் எங்களுடைய அமைப்பின் பிரதிநிதிகள் மூலம் யார் யாருக்கு என்ன விடயங்களை செய்ய வேண்டுமோ அதை உத்தியோகபூர்வமாக கிராமசேவகர்கள், பிரதேச செயலாளர்கள் மூலமாக செய்துகொண்டிருக்கின்றோம். ஆனால் இவர்களோ நாங்கள் கணக்கறிக்கைகள் காட்டவில்லை என்றும் அரசியல் இலாபம் தேடுவதற்காக செயற்படுவதாகவும் கூறிக்கொண்டு இன்றைய தினத்தில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள்.


சுவிஸ் உதயம் அமைப்பு கிழக்கு மாகாண கிளை சார்பாகவும் தலைமையகமாக இயங்கிக்கொண்டிருக்கும் சுவிற்சர்லாந்து கிளை சார்பாகவும் இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். இவர்கள் தொடர்ந்து இவ்வாறு செயற்படும் பட்சத்தில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் ஏற்கனவே இவர்களுக்கு எதிராக சுவிற்சர்லாந்து நாட்டில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.