வேலைகள் முழுமை பெற்றால் மாத்திரமே பொறுப்பேற்போம்: மாநகர முதல்வரிடமிருந்து பறந்தது கண்டிப்பான செய்தி

மட்டக்களப்பு தனியார் பஸ் நிலையமானது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக அண்மையில் திறக்கப்பட்டாலும் அதை இன்னும் மாநகர சபை கையேற்கவில்லை. அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், அதற்கான செலவு மதிப்பீடு என்பவற்றுக்கு ஏற்ப அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே நாம் பொறுப்பேற்போம் என கண்டிப்பான அறிவுறுத்தலை அமைச்சருக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் தாம் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் பஸ் நிலையத்தின் தற்போதைய நிலை தொடர்பில் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் தெளிவினைப் பெறும் பொருட்டு ஊடகவியாலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வியின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துள்ள பேரூந்துகளின் எண்ணிக்கை, அவ்விடத்தைப் பயன்படுத்துகின்ற பயணிகளின் அதிகரிப்பு மற்றும் அங்கு காணப்பட்ட இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில் கொண்டு குறித்த தனியார் பஸ் நிலையத்தினைக் காலத்தின் தேவைக்கு ஏற்ப விஸ்தரித்து அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. எனவே அதற்கான நிதி வளங்களைப் பெறும் பொருட்டு பல அமைச்சுக்களிடம் திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தோம். இதற்கமைய இத்திட்டத்தினை மேற்கொள்வதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையானது முன்வந்தது. அந்தவகையில் உடனடியாக கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு கொழும்பில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையால் இதற்கான வரைபடம், திட்ட செலவு மதிப்பீடு என்பன தயாரிக்கப்பட்டு அதற்கமைய பத்திரிகைகளின் வாயிலாக திறந்த கேள்வியும் கோரப்பட்டதுடன் அவர்களாலேயே ஒப்பந்ததாரரும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் தனியார் பஸ் நிலையத்தினை அமைப்பதற்காக குறித்த இடத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு முறையாகக் கையளித்திருந்தோம். குறித்த வேலை விடயத்தில் மாநகர சபை தனது தலையீட்டில் செய்வதாகவோ அல்லது ஒதுக்கப்படும் நிதி விடயத்தில் இறுக்கமான நடைமுறையினை மேற்கொள்ளவோ விளைந்திருந்தால் இத்திட்டமானது வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கக் கூடிய சந்தர்ப்பமும் இருந்தது. ஏனெனில் இதற்கு பல அமைச்சர்கள் தயாராகவே இருந்திருந்தார்கள்.

எனவே தமிழ் பிரதேசங்களுக்கு மிகமிக அரிதாகக் கிடைக்கப் பெறுகின்ற அரச வளங்கள் கூட எமது பிரதேசத்தை விட்டுச் செல்லக் கூடாது என்ற குறிக்கோலுடனேயே மாநகர சபை இவ்விடயத்தில் செயற்பட்டது. அதனடிப்படையில் குறித்த பஸ் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முழுமையாக முன்னெடுக்கப்பட்டன.

தற்போது இந்த வேலைகள் முழுமையடையாத நிலையில் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவசர அவசரமாக திறக்கபட்டுள்ளது. இது முற்றுமுழுதாகப் பூரணப்படுத்தப்படாமை குறித்து பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சருக்கும், சம்மந்தப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் தெளிவுறுத்தியதோடு பூரணப்படுத்தப்படுத்தாத குறித்த கட்டத்தினை தாம் ஒருபோதும் கையேற்ற மாட்டோம் என்ற கண்டிப்பான அறிவித்தலையும் வழங்கியுள்ளோம்.

கடந்த காலத்தில் எமது வெபர் விளையாட்டு அரங்கும் கூட வேலைகள் பூரணப்படுத்தப்படாத நிலையில் மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டிருந்ததன் காரணமாக இன்றும் அவ் மைதானம் பல குறைபாடுகளுடனேயே காணப்படுகின்றமையையும் நாம் ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், இதனைப் பூரணமாக நிறைவு செய்த பின்பே மாநகர சபைக்கு கையளிப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தனது தெரிவித்தார்.