களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடல்?

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மாலை இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கியத்துவமான வைத்தியசாலையாகும்.கடந்தகால போர்ச்சூழலில் மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய வைத்தியசாலையாகும்.

அதன் பௌதீகள் வளங்கள் ஓரளவு பூர்த்திசெய்யப்பட்டாலும் இன்னும் பல்வேறு பிரச்சினைகள் அங்கு காணப்படுகின்றன.அவற்றினை தீர்ப்பதற்கான நடவடிக்கையினை வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினரும் வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கட்டிட திறப்பு விழாவுக்கு சுகாதார அமைச்சர் வருகைதந்தபோது என்னால் அங்கு செல்லமுடியாத நிலையிலும் சுகாதார அமைச்சரின் செயலாளருடன் தொடர்புகொண்டு வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துகொடுத்தேன்.

இந்த நிலையில் சுகாதார அமைச்சில் அமைச்சரை நேரடியாக சந்தித்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றேன்.அதன் ஒரு கட்டமாக சில தினங்களில் சுகாதார அமைச்சரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றேன் எனவும் தெரிவித்தார்.