எப்போது பேசுவது?(கட்டுரை)

       பேச வேண்டிய நேரத்தில் ,பேச வேண்டிய முறையில் பேசாமல் விட்ட பலாபலனை இன்றும் மட்டு தமிழ் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
புல்லுமலை குடி நீர் தொழிற்சாலை விவகாரம்,கற்குடா எதனோல் தொழிற்சாலை விவகாரம் ,எல்லை மறுசீரமைப்பு,நில ஆக்கிரமிப்பு,மேய்ச்சல் தரை விவகாரம்,புதிதாக குடி நீர் தட்டுபாடு என இப்படி நீளும் பட்டியல் பற்பல,இறுதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகவிவகாரம். இதில் வெடிகுண்டு அறிக்கையை நம்பி கல்முனை இளைஞர்கள் வெடி சுட்டு கரியை முகத்தில் பூசிக் கொண்டதுதான் மிச்சம்.


எல்லை மீள் நிர்ணயம்.
 இது நீண்ட காலப் பிரச்சனை ,மீண்டும் பேசு பொருளாக தொடங்கியுள்ளது.கல்முனை விவகாரம் பூதாகாரமாக வெளிக்கிளம்பியமைக்கும் உரிய வேளையில் பேசி முடிவு காணாமையேயாகும்.கிழக்கில் பல பிரதேச சபை உருவாக்கமும் உள்ள பிரதேச சபைகளில் எல்லைகளில் மறுசீரமைப்பும் செய்ய வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது.கிழக்கில் சிறுபான்மைச் சமூகம் அரச ஆதரவுடனும் அதிகாரத்துடனும் பெரும்பான்மைச் சமூகம் போல் எம்மை ஒடுக்க முனைகிறது.வாக்குப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பேசும் மொழி தொடர்ந்தும் மௌனமாகவே இருக்கிறது.மக்கள் திரளாக கிளர்ச்சி கொள்வதைத் தவிர வேறில்லை.
திருகோணமலையில் மூதூரில் தொடங்கி மட்டக்களப்பில் வாழைச்சேனை,ஏறாவூர்பற்று,ஆரையம்பதி  என நீண்டு அம்பாறையில் கல்முனை ,பெரிய நீலாவனை ,பொத்துவில் என நீள்கிறது.இவை சில உதாரணங்களே முழுமையானவை அல்ல.
 மூதூர் பிரதேசத்தில்  கிராமசபைகளாக விளங்கிய பழம்பெரும் தமிழ்கிராமங்கள் பிரதேச சபை உருவாக்கத்தின் போது மூதூர்பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டு ,இன்று அவர்களின் தனித்துவங்கள் இழக்கப்பட்டுக்கொண்டிருப்பதுடன் நசுக்கப்பட்டும் கொண்டிருக்கிறார்கள்.இன்று அவர்கள் மத்தியில் தங்கள் தமிழ் கிராமங்களை உள்ளடக்கி தோப்பூர் பிரதேசசபை எனும் நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது.இதனைப்பற்றி எப்போது பேசப்போகிறார்கள்.

ஏறாவூர் பற்றில் கரடியனாறு-புல்லுமலையை மையமாகக் கொண்ட பிரதேச சபை ஒன்றின் தேவைப்பாடு உணரப்பட்டுள்ளது.மக்கள் இதனை பேசு பொருளாக ஆக்கத் தொடங்கியுள்ளனர்.இது பழையவைதான் புதிதாக மீண்டும் கிளரப்பட்டுள்ள ஒரு விடயம் ,தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயம்.பழைய தேர்தல் தொகுதி முறையில் மட்டக்களப்பு மட்டும் இரட்டை அங்கத்தவர் தொகுதி,கற்குடாவும் பட்டிருப்பும் ஒற்றை அங்கத்தவர் தொகுதி.இதன்படி மட்டு மாவட்டத்தில் மூன்று தமிழ் பிரதிநிதியும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் தெரிவாவர். அவ்வாறே படி தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையில் நான்கு தமிழ் பிரதி நிதியும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் வரவேண்டும்.ஆனால் நடைமுறையில் அவ்வாறில்லை , தமிழர்கள் தேசியகட்சிகளுக்கு வாக்களிப்பதனாலும் ,வாக்களிக்க சோம்பேறிப்படுவதனாலும் (தமிழ் பிரதேசங்களில் சராசரி வாக்களிப்பு வீதம் 60 வீதம்,முஸ்லிம் பிரதேசங்களில் 90 வீதம்) நான்கு வர வேண்டிய தமிழ் பிரதிநிதி மூன்றாகவும்,ஒன்று வரவேண்டிய முஸ்லிம் பிரதிநிதி இரண்டாகவும் வருகின்றது.இதனை உணர்ந்து கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகள்
இதனை தொடர்ந்து தக்கவைக்க புதிய எல்லை நிர்ணயத்தில் அதற்கான திட்டவரைவுகளையும் முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். இதற்காக காத்தான்குடியை மையங் கொண்டு அப்படியே சில தமிழ் பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு தேர்தல் தொகுதியும்,ஓட்டமாவடியை மையங் கொண்டு புணானை வரை ஒரு தேர்தல் தொகுதி முன்வரைபும் உத்தேசிக்கப்பட்டு சில முன்னெடுப்புக்கள் நடைபெறுகிறது. இது அவர்களின் முயற்சி நமது முயற்சி என்ன? இது பற்றி எப்போது நாம் பேசப் போகிறோம்.


மின்சாரத்தின் பெயரால் வயலை இழப்பதா?
மின்தேவையை பூர்த்தி செய்தல் எனும் போர்வையில் வயல் சூழ்ந்த படுவான் மண்ணில் வவுனதீவு பிரதேச சபை எல்லைக்குள் பன்சேனை,காந்திநகர் ஆகிய இரு இடங்களில் 49.5 ஏக்கர் நிலமும்,வாகரை காயாங்கேணி பிரதேசத்தில் 49.5 ஏக்கர் நிலமும்  அபிவிருத்தி என்ற சங்கதியில் காத்தான்குடியை உரிமையாளராகக் கொண்ட சிங்கள பெயர் கொண்ட நிறுவனத்திற்கு வழங்கப் படுகிறது.ஏன் 50 ஏக்கர் என்று முழு எண்ணில் கொடுக்கவில்லை, கொடுத்திருக்கலாமேயென்றால் 50 உம் அதற்கு மேலேயும் என்றால் முதலீட்டு ஊக்குவிப்பு சபை உட்பட பல இடங்களுக்கு போய் சிக்கல் பட வேண்டியிருக்கும் என்பதனால் இந்த உத்தியை கைக்கொள்கிறார்கள் நம்மவர்கள்.
இதைப்பற்றி எப்போது பேசுவது?
பேச வேண்டிய நேரத்தில், அந்த சந்தர்ப்பங்களெல்லாம் நாடி வந்த போதும் பேசாமல் விட்டு விட்டோம், இனிமேலும் எப்போது பேசப்போகிறோம். பெரும்பான்மையாக பார்வையாளர்களாகவும், சிறுபான்மையாக பங்காளர்களாகவும் இருக்கும் மனநிலை முதலில் மாற்றமுற வேண்டும்,  மக்கள் திரளாக திரட்சி கொள்ள வேண்டும். நிர்ப்பந்தங்களுக்கான சூழல் உருவாகும்.அப்போது மௌன மொழி களைந்து பேசத் தொடங்குவார்கள்.