மட்டக்களப்பில் காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்


(செங்கலடி நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புக்கு எதிராக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இன்று மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் செங்கலடி-பதுளை வீதியில் உள்ள மக்கள் கலந்துகொண்டு தமது எதிர்பக்பினை வெளியிட்டனர்.

தமது பாரம்பரிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட்டுவருவதாக மக்கள் இதன்போது குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக அபிவிருத்தி என்னும் பெயரிலும் பாதுகாப்பு என்ற போர்வையிலும் பெருமளவான காணி வளங்கள் அபகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

வனஜீவராசி திணைக்களமே எமது காணிகளை அபகரிக்காதேஇஅரச திணைக்களங்களே எமது காணிகளை அபரிக்காதே,இராணுவமே எமது காணிகளைவிட்டு வெளியேறு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, கல்குடா, புல்லுமலை, வவுணதீவு, வாழைச்சேனை,வாகரை போன்ற இடங்களில் அரசபடையினர், அரசியல்வாதிகள்,இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள மக்களிடம் வழங்கவேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.