டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் மட்டக்களப்பில் விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு கட்டுப்பாடு தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,பாதுகாப்பு படைகளின் பிரதானிகள்,பிரதேசசபை செயலாளர்கள்,திணைக்களங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது.

கடந்த 8 மாத காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கத்தினால் எந்த ஒரு உயிரும் காவு கொல்லப்படவில்லை எனவும் மூன்றாவது இடத்தில் இருந்த மட்டக்களப்பு மாவட்டம் 12 ஆவது இடத்துக்கு போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தில் நிலையான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பாடசாலைகளில் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் இதன் மூலமாக டெங்கு நுளம்பு தாக்கத்தை முற்றாக தடை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேசசபைகள் ஊடாக சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களை பாதுகாப்பான முறையில் முகாமைத்துவம் செய்து மழைகாலங்களில் ஏற்படும் அசௌகரியங்களையும் சுகாதார பிரச்சினைகளையும் தவிர்ப்பது தொடர்பாகவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் மழை வீழ்ச்சி இன்மையினால் டெங்கு தாக்கம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கலந்துரையாடலுக்கு தொற்றா நோய்க்கு பொறுப்பான வைத்திய அதிகாரி பி குலசேகரம்,பிரதி அரசாங்க அதிபர் ஏ. நகுலேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.