சிறப்பாக நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஐந்தாம் நாள் திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் ஐந்தாம் நாள் திருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசவுந்தரராஜன் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றுவரும் மஹோற்சவத்தில் தினமும் தம்பபூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று சுவாமி உள்வீதி,வெளிவீதியுலா நடைபெற்றுவருகின்றது.

இன்று ஐந்தாம் நாள் மஹோற்சவமான கிலக்கிலங்கை புகையிர ஊழியர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இன்று பிள்ளையார் எலி வாகனதிலும் முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் சிவபெருமான் எருது வாகனத்திலும் ஏறி வெளிவீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இறந்தவர்களின் மோட்சத்திற்கான பிதிர்க்கடன் செலுத்தும் சிறப்பினைப்பெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்த திருவிழா எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.